Wednesday, October 31, 2012

மணித் திரள்


14 பிப்ரவரி 1921                               ரெளத்திரி மாசி 3

வாளும் எழுதுகோலும்

என்றைக்குமே ராஜ்ய தந்த்ரத்தில் வாளைக் காட்டிலும் எழுதுகோலுக்கே மகிமை அதிகம். அதிலும் ஐரோப்பிய மஹா யுத்தத்தின் பிறகு இக்கொள்கை முன் எப்போதையுங் காட்டிலும் அதிக ஆழமாகவும் உறுதியாகவும் பூமண்டலத்து ராஜ்ய தந்திரிகளின் மனதில் பதிந்து விட்டது. ப்ரான்ஸ் தேசம் ஒன்றில் மாத்திரமே இந்த மஹா யுத்தத்தில் பத்து லக்ஷம் ஜனங்கள் மடிந்திருப்பதையும் இன்னும் பல லக்ஷங்கள் அங்கஹீனராய் விட்ட்டதையும் எடுத்துக்காடி, அப்பால் இங்கிலாந்திற்கும் இதைவிடக் குறையாத நஷ்டமேற்பட்டிருக்கு மென்பதைச் சுட்டிச் சில தினங்களின் முன்பு ஸ்ரீமான் க்ளெ மான்ஸோ என்ற ப்ரெஞ்ச் ராஜதந்திரி (இப்போது இந்தியாவில் யாத்திரை செய்துகொண்டு வருபவர்) இனிமேலேனும் உலகத்தார் யுத்தப் பைத்தியத்தை விட்டுத் தொலைத்தல் அவஸரமென்பதை வற்புறுத்தியது நேயர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அமீர் அமானுல்லாகான்

1921 ஜனவரி 10-ஆந் தேதி திங்கட்கிழமையன்று காபூல் நகரத்தில் ப்ரிடிஷ் தூதர்களை வரவேற்கும் பொருட்டாக ஒரு பெரிய தர்பார் நடத்தப்பட்டது. அப்போது ஆப்கன் அரசராகிய அமீர் அமானுல்லாகான் செய்த உபந்யாஸத்தினிடையே, காபூலில் நடத்தும் ஆங்கில-ஆப்கன் ஆலோசனை ஸபையில் தம்முடைய முக்ய ப்ரதிநிதியாக ஸர்தார்-இ-ஆலா முஹம்மது கான் தர்ஜியை நியமனம் செய்ததற்குப் பின் வருமாறு காரணம் சொன்னார்:- “ஸர்தார் முஹம்மத் நாதிர்கான் போர்த் தொழிலாளியாதலால் நான் அவரை நியமனம் செய்யவில்லை. ஸர்தார்-இ-ஆலா முஹம்மது கான் தர்ஜி எழுதுகோற் பயிற்சியுடையவராதலால் அவரையே நியமனம் செய்திருக்கிறேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் வாளைக் காட்டிலும் எழுதுகோலே அதிக அவசியமானது” என்றார். இந்த உண்மையான கொள்கையை ஆப்கன் அமீர் எப்போதும் மறக்காமலிருப்பாரென்று நம்புகிறோம். தேசத்தின் அபிவிருத்திருக்குப் பரோபகார சிந்தையுள்ள மேதாவிகளின் இடையறாத உழைப்பே ஸாதனம். வாள் சிறிது காலத்துக்குக் காப்பாற்றுவதுபோலே நடிக்கும். பிறகு ஸர்வ நாசத்தில் கொண்டே சேர்க்கும். எனவே இந்தியாவுக்கு “வாள் பலம்” அல்லது தற்கால பாஷைப்படி பீரங்கி பலம் இப்போதில்லாமை கருதி, நாம் எப்படி விடுதலை பெறப்போகிறோமென்று எவரும் ஏங்குதல் வேண்டா. தைர்யமும் ஒற்றுமையும் தந்திரமும் சேர்ந்தால் இவற்றுக்கெதிரே கோடி பீரங்கிகள் நிற்பினும் அஃதோர் பொருட்டன்று.

“டைம்ஸ் ஆப் இந்தியாவின் விகடம்”

பம்பாயில் பிரசுரமாகும் “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையின் பிரதிநிதியொருவருடனே ஸ்ரீ ஆகாகான் செய்த ஸம்பாஷணை அப்பத்திரிகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீ ஆகாகான் துருக்கி உடம்பாட்டை மாற்றும் விஷயத்தில் இங்கிலாந்து தலைமை வஹித்து நடத்தவேண்டுமென்று சொல்லியிருந்தார். இப்போது ஆகாகானுடைய இஷ்டப்படியே நடந்துவிட்டதாக அப்பத்திரிகை தன் தலையங்கமொன்றில் ஸந்தோஷச் செய்தி தெரிவிக்கிறது! என்ன நடந்தது? ஆங்கிலேயர் முற்பட்டு முண்டு வேலை செய்து “ஸேவர்” உடம்பாட்டின் அநீத நிபந்தனைகளை மாற்றித் துருக்கியை அதன் பழைய பெருமையில் ஸ்தாபித்து விட்டார்களா? அஃதன்று! துருக்கியுடம்பாட்டின் விஷயமாக எதிர்காலத்தில் செய்யவேண்டிய கார்யங்களைக் குறித்து ஆலோசனை செய்யும் பொருட்டு அடுத்த மாஸம் லண்டனில் ஒரு ஸபை நடத்தப்போவதாகத் தீர்மானித்திருக்கிறார்கள். இதைத்தான் அந்தப் பத்திரிகை ஆகாகானுடைய அபீஷ்ட ஸித்தியாகக் காண்பிக்கிறது! ஆனால் லண்டனில் இந்த ஸபை நடத்துவது மிகவும் கெட்ட அடையாளமென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் ப்ரான்ஸ் மந்திரிகளும் இத்தாலி மந்திரிகளும் இவ்விஷயத்தில் துருக்கிக்கு ஒரு வேளை அனுதாபம் செய்யக்கூடும். மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலிய ஆங்கில மந்திரிகளோ எப்படியாவது கிரேக்கரின் நட்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதிலும், துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட நாடுகளை அதனிடம் மீட்டும் ஒப்புவிக்கக்கூடா தென்பதிலும் ஒரே உறுதியாக நிற்கிறார்கள்.

கிறிஸ்தவ நாகரிகத்துக்கு காவலாளி

வேல்ஸ் தேசத்து லிபரல் மஹா ஸங்கத்தின் நிர்வாக உத்யோகஸ்தருடன் சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒரு ரஹஸ்ய ஸம்பாஷணை நடத்தினார். எனினும் இந்தக் கூட்டத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் பேசிய விஷயம் பின்னிட்டு இங்கிலாந்தில் ப்ரசுரமாய், ராய்ட்டர் தந்தி மூலமாக நமக்கெட்டி யிருக்கிறது. அதிலே கூட மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஜெர்மனி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுத்தொகையை விட்டுக் கொடுப்பதும் கிறிஸ்தவ ஜனங்களை மீட்டும் துருக்கியின் ராஜாங்க நுகத்தடியின் கீழே கொணர்வதும் “லிபரல்” கக்ஷியின் நோக்கத்துக்கு விரோதமென்று வற்புறுத்திக் காட்டியிருக்கிறார். இதுபோலவே, துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட பூமிகளை அதன்பால் மீட்டும் விடுவதினின்றும் கிறிஸ்தவ நாகரிகத்துக்கு ஹானி வருமென்ற தமது கொள்கையை ஆங்கிலத் தலைமை மந்திரி இதுவரை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். எனவே, லண்டனில் இப்படிப்பட்ட மந்திரிகளின் ஆதிக்கத்தின் கீழே நடத்தப் போகிற கூட்டத்தில் துருக்கிக்கு எள்ளளவேனும் நியாயம் கிடைக்காது. கிரேக்க தேசத்துக்குப் பிடுக்கிங்க் கொடுத்த பிரதேசங்களில் கிறிஸ்தவர்கள் வாஸம் புரிவதால் அவற்றைத் துருக்கிக்கு மீட்டும் ஒப்புவிப்பது சரியில்லையென்று சொல்லும் ஆங்கிலேய முதல் மந்திரி மெஸபொடோமியாவில் கிறிஸ்தவ ஜனத்தொகையில்லை யென்றுணர்ந்தும் அதையேன் துருக்கியிடம் கொடுத்துவிடக்கூடாது? அந்த மெஸபோடோமியாவை இங்கிலாந்து கிறிஸ்தவ நாகரிகத்தால் மஹிமைப்படுத்த எண்ணங்கொண்டுவிட்டது. ஆதலால் அதையும் விடக்கூடவில்லை; என்ன செய்யலாம்?

மயிலே, மயிலே

“மயிலே, மயிலே, இறகு போடு” என்றால் போடாது. வற்புறுத்தி இறகைப் பிடுங்கவேண்டும். வெறும் வாய்ப் பேச்சால் இங்கிலாந்தினிடமிருந்து நீதி பெறுதல் ஸாத்யமில்லை. இந்தியாவிலும், மற்ற முஸ்லிம் தேசங்களிலும் பலமான கிளர்ச்சி நடத்தினாலன்றி, “ஸேவர்” உடம்பாடு நியாயப்படி மாற்றப்படுதல் ஸாத்யமில்லை. “கிளர்ச்சி செய்யுங்கள்!” “கிளர்ச்சி செய்யுங்கள்!” “கிளர்ச்சி செய்யுங்கள்!” என்று முக்காலும் கூறி, ஸ்ரீமான் தாதாபாய் நவுரோஜி கல்கத்தா காங்கிரஸ் ஸபையில் செய்த உபதேசத்தையே இன்று நான் முஸ்லிம் உலக முழுமைக்கும் செய்கிறேன். ஆசியா வாஸிகள் அனைவருக்கும் செய்கிறேன்.

அடக்கு முறைகள்

1921 பெப்ருவரி 10-ஆந் தேதியன்று ஸ்ரீ காசியில் தேசீய ஸர்வ கலாசாலையொன்று மஹாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விசேஷம் நடக்கும்போது பிரமாண்டமான ஜனத்திரள் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஜக்யமாகாணத்து விவசாயிகளின் தலைவராகிய பாபா ராம் சந்தர் என்ற ஸந்யாஸியைத் துப்பாக்கியில் மருந்தேற்றிக் கொண்டு போலீஸார் பெருங்கூட்டமாக வந்து கைது செய்ததாகத் தெரிகிறது. கூட்டத்தார் மனக் கொதிப்பினால் கலகம் செய்வார்களென்றும், அதை முகாந்திரமாகக் காட்டித் தாங்கள் ஏராளமாக ஜனங்களைச் சுட்டுத் தள்ளுவதுமன்றி, மஹாத்மா காந்திக்கும் ஏதேனும் ஆபத்துண்டாக்கலாமென்றும் போலீஸார் எதிர்பார்த்தனர் போலும். ஆனால் அந்த அவமானத்தை ஜனங்கள் ஸமாதானமாகப் பொறுத்திருக்கும்படி தலைவர்கள் சொல்லியது கேட்டு ஜனங்கள் சும்மா இருந்துவிட்டனர். எனவே, போலீஸார் பாபா ஒருவரை மாத்திரங்கொண்டு மீண்டேகினர். தேசீய ஸர்வ கலாசாலையின் ஆரம்ப விசேஷங்கள் நடத்தும் இடத்திலே தானா பாபாவைப் பிடிக்கவேண்டும்? தனியாக அவர் வீட்டிலிருக்கும்போது பிடிக்கக் கூடாதா? கூட்டத்தார் அவசரப்பட்டு மனம் பதறி ஏதேனும் செய்திருந்தால் என்னென்ன ஆபத்துக்கள் விளைந்திருக்குமோ யார் அறிவார்? இங்ஙனம் முற்றிலும் விரும்பத்தகாத விரஸமான வழிகளீல் ராஜாங்கத்தார் அடக்கு முறைகளை அனுஸரிப்பதினின்றும் அவர்களுக்கு ஏற்கெனவே தேசத்திலுள்ள மதிப்புக் குறை இன்னும் மிகுதியுறு மென்பதை அவர்கள் அறியாதது பற்றி வருத்தமடைகிறோம். மேலும் போலீஸார் இப்படி அநாகரிகமாக வேலை செய்த போது கூட மனக்கொதிப்புக்கிடங்க் கொடுக்காமல் தலைவர்களின் சொற்படி கேட்டு ஜனக்கூட்டத்தார் அடங்கியிருந்தது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பொறுத்தார் ரன்றோ பூமியாள்வார்?

Tuesday, October 30, 2012

மது

போகி

பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ?

யோகி

பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ?

போகி

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம்.

யோகி

வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம்.

போகி

நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ?

யோகி

நல்ல கீதம், சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ?

ஞானி

மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே.

இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே.

இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை.

தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம்.

வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே.

சங்கீர்த்தனம்
மூவரும் சேர்ந்து பாடுதல்

மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,

மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.

Monday, October 29, 2012

சந்திரமதி

ராகம்-ஆனந்த பைரவி                                          தாளம்-ஆதி

பச்சைக் குழந்தை யடி! - கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது! - என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி! - என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட
தேவி! நினை விழந்தேனடி!

நீலக் கடலினிலே - நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே - நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே - நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே - நின்தன்
காதல் விளங்குதடி!

Sunday, October 28, 2012

சொல்

சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
 ஆவ லறிந்துவரு வீர்கொலோ? - உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே.

‘ஓம்’என் றுரைத்துவிடிற் போதுமோ? - அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ? - என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?

“உண்மை ஒளிர்க’ என்று பாடவோ? - அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.

“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” - என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர் - எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.

வான மழைபொழிதல் போலவே - நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர் - துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.

விரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் - நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.

மின்ன லனையதி றல் ஓங்குமே - உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே - இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே.

தெய்வக் கனல்விளைந்து காக்குமே - நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே - பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.

“வலிமை,வலிமை”என்று பாடுவோம் - என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம் - நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.

“அமிழ்தம்,அமிழ்தம்” என்று கூறுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம் - என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்.

Saturday, October 27, 2012

நிலாவும் வான்மீனும் காற்றும்

மனத்தை வாழ்த்துதல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேரப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்
உலாவு மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்வண்டு
பாடுவ தும்வியப்போ ?

தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போ மனமே!
ஈரச் சுவையதில் ஊறி வரும்அதில்
இன்புறு வாய்மனமே
சீரவி ருஞ்சுடர் மீனோடு வானத்துத்
திங்களை யுஞ்சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டோ ?

பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தி லோட
விரும்பி விரைந்திடுமே
முன்றிலில் ஓடுமொர் வண்டியைப் போலன்று
மூன்றுல கும்சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போலொரு
நல்ல மனம்படைத்தோம்

தென்னையின் கீற்றுச் சலசல என்றிடச்
செய்து வருங்காற்றே
உன்னைக் குதிரைகொண் டேறிக் திரியுமொரு
உள்ளம் படைத்துவிட்டோம்
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்த்திடும் நற்காற்றே
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும்இவ்
வொட்டொலி ஏன்கொணர்ந்தாய் ?

மண்ணுல கத்துநல்லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்
பண்ணில் இசைத்தவ் ஒலிகள் அனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்
நண்ணி வரும்மணி ஓசையும் பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்
எண்ணுமுன் னே "அன்னக் காவடிப் பிச்சை" என்று
ஏங்கிடு வான்குரலும்

வீதிக் கதவை யடைப்பதுங் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை அழுந்குரலும்
ஏதேது கொண்டு வருகுது காற்று இவை
எண்ணில் அகப்படுமோ ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய் மனமே

Friday, October 26, 2012

மஹா சக்தி பஞ்சகம்

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்; நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்.
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தலுன் கடனே.

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்
யாவுமா நின்தனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்; மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்; இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால்.

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும், நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்
மயங்கினேன்; அதையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்.
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.

ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது; சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின; உறுதிநான் கண்டேன்,
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே.

தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;
சிவத்தினை இனிதாப் புரிந்தனள், மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்கஇங் கவளே!

Thursday, October 25, 2012

காட்டுக் கோயிலின் கதை

விவேக சாஸ்திரி தமது மக்களை நோக்கிச் சொல்லுகிறார்:-

முன்னொரு காலத்தில் பொன்னங்காடு என்ற பெருங்காட்டில் வீரவர்மன் என்றொரு சிங்கம் அரசு செலுத்திக் கொண்டு வருகையில், அதனிடத்துக்கு விகாரன் என்ற புறத்து நரியொன்று வந்து வணக்கம் செய்தது. "நீ யார்? உனக்கென்ன வேண்டும்?" என்று வீரவர்மன் கேட்டது.

அப்போது நரி சொல்லுகிறது:- "என் பெயர் விகாரன். வடக்கே நெடுந்தூரத்திலுள்ள பேய்க்காடு என்ற வனத்தில் அரசு செலுத்தும் தண்டிராஜன் என்ற சிங்கத்திடம் என் பிதா மந்திரியாக இருந்தார். அவர் காலஞ் சென்ற பிறகு, அந்த ஸ்தானத்தில் என்னை வைக்காமல், அவ்வரசன் தனது குணத்துக்கிணங்கியபடி கண்டகன் என்ற பெயர் கொண்ட கிழ ஓநாயை மந்திரியாகச் செய்து என்னைப் புறக்கணித்து விட்டான். 'மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்' என்று வசனமிருப்பதால் நான் அந்த ராஜ்யத்தை விட்டுப் பல தேசங்களில் ஸஞ்சாரம் செய்து வருகையிலே, ஸந்நிதானத்தின் வீரச் செயல்களையும் தர்மகுணங்களையும் கேள்விப்பட்டு, 'ஆஹா! வேலை செய்தால் இப்படிப்பட்ட சிங்கத்தினிடமன்றோ செய்யவேண்டும், என்ற ஆவல் கொண்டவனாய், ஸந்நிதானத்தைத் தரிசனம் செய்து நம்முடைய பிறப்பைப் பயனுடையதாகச் செய்து கொள்ளவேண்டுமென்ற நோக்கத்துடன் இங்கு வந்தேன். தம்மைக் கண்ட மாத்திரத்தில் எனது கலி நீங்கிவிட்டது" என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுச் சிங்கம் புன்னகை கொண்டு, சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "சரி, நீ நம்முடைய அரண்மனையில் சேவகம் செய்து கொண்டிரு" என்றாக்கினை செய்தது. மறுநாட் காலையில் வீரவர்மனிடம் அதன் கிழ மந்திரியாகிய தந்திரசேனன் என்ற நரி வந்து சொல்லலாயிற்று:-

"அரசனே, நேற்றுத் தம்மிடம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரி வந்து பேசியதாகவும் அவனைத் தாம் அரண்மனை வேலையில் நியமித்துக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். என்னிடம் ஆலோசனை செய்யாமல் தாம் இந்தக் காரியம் செய்தது பற்றி நான் வருத்தப்படுகிறேன். ராஜ்ய நீதியில் சிறந்த ஞானமுடைய தாம் புறத்து நரியை, தன்னரசன் காரியத்தை நடத்தத் திறமையில்லாமலோ துரோகத்தாலோ வெளிப்பட்டு வந்திருக்கும் நரியை முன் சரித்திரந் தெரியாத நரியை, இத்தனை அவசரப்பட்டு நம்பின செய்கையை நினைக்கும்போது, எனக்கு ஆச்சரியமுண்டாகிறது" என்றது.

இதைக் கேட்ட வீரவர்மன் நகைத்து 'நீர் சாஸ்திரத்தை நம்பிச் சொல்லுகிறீர். நான் தெய்வத்தை நம்பிச் செய்தேன்' என்றது. அப்போது தந்திரசேனன் என்கிற கிழ நரி சொல்லுகிறது:- "எவன் சாஸ்திரத்தை நம்புகிறானோ' அவனே தெய்வத்தை நம்புகிறான். உலகத்தின் அனுபவமே தெய்வத்தின் வாக்கு. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது சரியான சாஸ்திரம். நான் லோகானுபவத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுகிறேன். இது தெய்வத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. ஆதலால் நான் சாஸ்திரத்தை நம்புவதாகவும், தாம் தெய்வத்தை நம்புவதாகவும், பேதப்படுத்திச் சொல்வதின் பொருள் எனக்கு விளங்கவில்லை" என்றது. சிங்கம் மறுமொழியே சொல்லவில்லை. சிறிது நேரம் சும்மா காத்திருந்துவிட்டு, "மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்" என்றெண்ணிக் கிழ நரி விடை பெற்றுச் சென்றது. அப்போது சிங்கம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரியைத் தன் முன்னே அழைப்பித்துப் பின்வருமாறு கேட்டது:-

"விகாரா, தண்டிராஜன் உனது பிதாவின் ஸ்தானத்தில் உன்னை நியமிக்காமல், கண்டகனை நியமித்த காரணமென்ன? உன்னிடமிருந்த பிழையென்ன?"

நரி சொல்லுகிறது:- "என் பிரானே, நான் யாதொரு குற்றமும் செய்யவில்லை. ஒரு வேளை என் வயதுக் குறையை எண்ணிச் செய்திருக்கலாம். மந்திரித் தொழிலுக்குக் கிழவனே தகுதியென்று மதியில்லாத ராஜாக்கள் நினைக்கிறார்கள். மேலும்,

"நற்றா மரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டிற்
காக்கை யுகக்கும் பிணம்" என்றது.

அப்போது சிங்கம் "உங்களுடைய தண்டிராஜனுக்கும் எனக்கும் பகையென்பதை நீ அறிவாயா?" என்று கேட்டது.

"அறிவேன்" என்று நரி சொல்லிற்று.

"தன்னரசனைக் கைவிட்டுப் பகையரசனைச் சார்ந்து வாழவிரும்பும் மந்திரிக்குப் பெயர் தெரியுமா?" என்று வீரவர்மன் கேட்டது. "அவன் பெயர் துரோகி" என்று விகாரன் சொல்லிற்று. சிங்கம் நகைத்தது. "உன்னுடைய குலதெய்வத்தின் பெயரென்ன?" என்று சிங்கம் கேட்டது.

"காட்டுக் கோயில் மாகாளி" என்று நரி சொல்லிற்று. சிங்கத்தின் உடம்பில் நடுக்கமுண்டாயிற்று. உடனே 'ஹா' என்று கத்திச் சிங்கம் தனது கையை உயர்த்திக்கொண்டு சொல்லுகிறது:

"மூட நரியே! எது நேர்ந்தாலும் உன்னைக் கொல்லக் கூடாதென்று நேற்றே என் மனதில் தீர்மானம் செய்து கொண்டபடியால், இப்போது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். என்னிடம் நீ பொய் சொல்லுகிறாயா? சொல் உண்மையை. உனது குல தெய்வத்தின் பெயரென்ன?" என்று உறுமிக் கேட்டது. விகாரனென்ற நரி நடுங்கிப் போய்ப் பின்வருமாறு சொல்லலாயிற்று.

நரி சொல்லுகிறது:- "ஐயனே, என்னுடைய பூர்வ குல தெய்வம் அதாவது என்னுடைய முன்னோரும் நேற்று வரை நானும் கும்பிட்டு வந்த தெய்வம் வேறு. அதன் பெயர் பேய் நாகன். அந்த தெய்வமே எங்கள் பேய்காட்டுக் காவல் நடத்தி வருகிறது. பேய்க்காட்டரசனாகிய தண்டிராஜனுக்கும் அவனுடைய குடிகள் எல்லோருக்கும் அதுவே குலதெய்வம். பரம்பரை வழக்கத்தால் எனது பிறப்பு முதல் நேற்று தங்களுடைய சந்நிதானத்தைத் தரிசனம் பண்ணும் வரை நானும் பேய் நாகனையே குலதெய்வமாகக் கொண்டாடினேன். தண்டிராஜனுடன் மனஸ்தாபப்பட்டு வெளியேறின கால முதலாக யாதொரு சரணுமில்லாமல் அலைந்து எனக்கு நேற்று இவ்விடத்து சந்நிதானத்தில் அபயங்கொடுத்தவுடனே, எனக்குச் சந்நிதானமே அரசனும், குருவும், தெய்வமும் ஆகிவிட்டபடியால், இவ்விடத்துக்கு குலதெய்வத்தின் பெயர் காட்டுக் கோயில் மாகாளி என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த மகா சக்தியையே எனக்கும் குலதெய்வமாக வரித்துக்கொண்டேன்" என்றது.

இதைக்கேட்டு 'வீரவர்மன்' காடு குலுங்கும்படி கோப நகை நகைத்துச் சொல்லுகிறது:-

"இன்னும் பொய் சொல்லுகிறாய். உன்னை மீளவும் க்ஷமிக்கிறேன். நேற்று உன்னைப் பார்த்தவுடனே கொல்ல நினைத்தேன். நீ சரணமென்று காலில் விழுந்தபடியால் துரோகியொருவன் வஞ்சகமாக அடைக்கலம் புகுந்தாலும் அவனைக் கொல்லாமல் விடுவது வீரருக்கு லக்ஷணமென்று நினைத்து உன்னைக் கொல்வதில்லை யென்று மனதில் நிர்ணயம் செய்து கொண்டேன். ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நீ நம்மிடம் உளவு பார்க்க வந்த ஒற்றன். அந்த முழு மூடனாகிய தண்டிராஜன் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறான். நான் இஷ்டப்படும் வரையில் இனி அவனுடைய முகத்தை நீ பார்க்கப் போவதில்லை. உன்னை நம்முடைய அரண்மனையில் வைத்துக் கொள்ளுவேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி நீ பொன்னங் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேற முயன்றால் உன்னுடைய நான்கு கால்களையும் வெட்டிவிடச் செய்வேன், தெரிகிறதா?"

விகாரன்:- "ஐயனே, என் விஷயமாக சந்நிதானத்தினிடம் யாரோ பொய்க் கதை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொறாமையினாலே செய்திருக்கிறார்கள். எனக்கும் தண்டிராஜனுக்கும் விரோதமென்பதைத் தாங்கள் பேய்க் காட்டுக்கு ஆளனுப்பி விசாரித்துவிட்டு வரும்படி செய்யலாம். அங்கே யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். இது பொய் வார்த்தையில்லை. காரணம் நேற்றே தெரிவிக்க வில்லையா? என்னுடைய பிதா வகித்த மந்திரி ஸ்தானத்தை அவன் எனக்குக் கொடுக்காமல் அந்த ஓநாய்க்குக் கொடுத்தான். அதிலிருந்து விரோதம். என்னை ஒன்றும் செய்யவேண்டாம். எனக்குத் தாங்களே குரு, தாங்களே பிதா, தாங்களே தெய்வம். தங்களைத் தவிர எனக்கு இப்போது வேறு கதியில்லை" என்றது.

அதற்கு வீரவர்மன்:- "சரி, இனிமேல் பொய் சொன்னால் அவசியம் கண்ணிரண்டையும் பிடுங்கி விடுவேன் சொல்லு, அந்த தண்டிராஜனிடம் சைனியங்கள் எவ்வளவிருக்கின்றன?"

விகாரன்:- "ராஜாதி ராஜனே, நான் அந்தக் காட்டில் எவ்விதமான அதிகாரமும் வகிக்கப்பெறவில்லை. சைனிய உளவுகள் எனக்கெப்படித் தெரியும்?"

இதைக் கேட்டவுடனே சிங்கம் "யாரடா அங்கே சேவகன்?" என்று கர்ஜனை செய்தது. உடனே ஒரு ஓநாய் ஓடி வந்து பணிந்து நின்றது. அதை நோக்கி வீரவர்மன் "ஸேனாபதியை உடனே அழைத்துவா என்று ஆக்கினை செய்தது. "உத்தரவுப்படி" என்று சொல்லி ஓநாய் வணங்கிச் சென்றது.

பிறகு வீரவர்மன் நரியை நோக்கிச் சொல்லுகிறது:-

"விகாரா, நமது ஸேனாபதியாகிய அக்னிகோபன் இன்னும் ஐந்து நிமிஷங்களுக்குள் இங்கே வந்து விடுவான். அவன் வருமுன்பு நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ தவறாமல் உண்மை சொல்லக் கடவாய். இதோ என் முகத்தைப் பார்" என்றது.

நரி குடல் நடுங்கிப் போய்ச் சிங்கத்தின் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்தது. இன்மேல் இந்தச் சிங்கத்தினிடம் பொய் சொன்னால் உயிர் மிஞ்சாதென்று நரிக்கு நல்ல நிச்சயம் ஏற்பட்டு விட்டது.

பிறகு நரி சொல்லுகிறது:-

"ஸ்வாமி, நான் சொல்லுகிற கணக்குத் தவறினாலும் தவறக் கூடும். எனக்குத் தெரிந்தவரையில் உண்மை சொல்லி விடுகிறேன். எனக்கு எவ்வித தண்டனையும் விதிக்க வேண்டாம். எனக்கு உங்களுடைய பாதமே துணை" - என்றது.

வீரவர்மன்: - "பேய்க்காட்டு சைனியம் எவ்வளவு? உடனே சொல்லு. உண்மை சொல்லு."

விகாரன்: - "புலிப்படை முந்நூறு, கரடி இருநூறு, காண்டா மிருகம் நூறு, ஓநாய் ஆயிரம், ஆனைப் படை ஆயிரம், நரிப்படை நாலாயிரம்."

வீரவர்மன்: - "உளவு பார்த்து வரும் காக்கைகள் எத்தனை?"

விகா: - "இருநூற்றைம்பது."

வீர: - "சுமை தூக்கும் ஒட்டகை எத்தனை? கழுதை எத்தனை?"

விகா: - "ஒட்டகை எண்ணூறு. கழுதை பதினாயிரம்."

வீரா: - "எத்தனை நாள் உணவு சேகரித்து வைத்திருக்கிறான்?"

விகா: - "ஞாபகமில்லை."

வீரா: - "கண் பத்திரம்."

விகா: - சத்தியம் சொல்லுகிறேன்; ஞாபகமில்லை."

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஸேனாபதியாகிய அக்கோபன் என்ற வேங்கைப்புலி வந்து கும்பிட்டு நின்றது.

"வருக" என்றது சிங்கம்.

அப்போது விகாரன் என்ற நரி தன் மனதுக்குள்ளே யோசனை பண்ணிக்கொள்ளுகிறது:

"ஹூம்! இந்தச் சிங்கராஜன் மகா வீரனாகவும், மகா கோபியாகவும் இருந்தாலும் நாம் நினைத்தபடி அத்தனை புத்திசாலியில்லை. நம்மை எதிரியின் ஒற்றனென்று தெரிந்து கொண்ட பிறகும் நம்மை வைத்துக்கொண்டு சேனாபதியிடம் யுத்த விசாரணை செய்யப்போகிறான். ஏதேனும், ஒரு யதிர்ச்சா வசத்தால் இவனுடைய காவலிலிருந்து நாம் தப்பியோடும்படி நேரிட்டால், பிறகு இவனுடைய யுத்த மர்மங்களை நாம் தண்டிராஜனிடம் சொல்லக் கூடுமென்பதை இவன் யோசிக்கவில்லை. இவனுக்குத் தீர்க்காலோசனை போதாது."

இங்ஙனம், நரி பலவாறு சிந்தனை செய்யுமிடையே, வாயிற்காப்பனாகிய ஓநாய் ஓடிவந்து "மகாராஜா, புரோகிதர் வந்திருக்கிறார்" என்றது. "உள்ளே வரச்சொல்லு" என்று வீரவர்மன் கட்டளையிட்டது. அப்பால், அங்கிரன் என்ற பெயர்கொண்டதும், வீரவர்மனுடைய குலத்துக்குப் பரம்பரையாகப் புரோகிதஞ் செய்யும் வமிசத்தில் பிறந்ததும், பெரிய மதி வலிமை கொண்டதுமாகிய கிழப்பருந்து பறந்து வந்து சிங்கத்தின் முன்னே வீற்றிருந்தது. சிங்கம் எழுந்து வணங்கிற்று. சிறிது நேரம் உபசார வார்த்தைகள் சொல்லிக் கொண்ட பிறகு புரோகிதப் பருந்து சிங்கத்தை நோக்கி:-

"அந்த நரிதான் பேய்க்காட்டு விகாரனோ?" என்று கேட்டது. சிங்கம் `ஆம்' என்றது. நரி திருடன் போலே விழித்தது. அப்போது சிங்கம் சொல்லுகிறது:- "ஸ்வாமி, இந்த நரியை நான் நயத்தாலும் பயத்தாலும் எனது பக்கம் சேரும்படி சொல்லிவிட்டேன். இவன் தண்டிராஜனிட மிருந்த அன்பை நீக்கி என்னாளாகி விட்டான். இவனை நான் இப்போது நம்முடைய மந்திரி சபையில் இருக்க இடங்கொடுத்ததினாலேயே நான் இவனிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டிருக்கிறேனென்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ளலாம். இவனுடைய பழைய நினைப்பை மறந்து இப்போது தண்டிராஜனுடைய உளவுகளை நமக்குத் தெரிவிக்கும் தொழிலில் அமர்ந்திருக்கிறான். அதனாலே தான் நமது சபையில் இவனைச் சேர்க்கும்படியாகிறது" என்றது.

பருந்து புன்னகை செய்தது. ஒன்றும் சொல்லவில்லை. அப்போது சிங்கம் கேட்கிறது:-

"ஸ்வாமி, ஒருவன் எதிர்பார்க்காத காரியத்தில் எதிர் பார்க்காதபடி ஆச்சரியமான வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு வழியென்ன?" என்றது.

அப்போது அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது:-

"அரசனே, மந்திரி சபையில் எதிர்பார்க்காத கேள்வி கேட்டாய். உனக்கு நான் மறுமொழி சொல்ல வேண்டுமானால், அதற்கு நீண்ட கதை சொல்லும்படி நேரிடும். மந்திராலோசனை சபையில் முக்கியமான காரியத்தை விட்டுப் புரோகிதனிடம் கதை கேட்க வேண்டுமென்ற சித்தம் உனக்குண்டானால் நான் சொல்வதில் ஆக்ஷேபமில்லை. நேரம் அதிகப்படும். அதுகொண்டு என்னிடம் கோபம் வரக்கூடாது" என்றது. அப்போது சிங்கம் ஒரு துளி சிரிப்போடு சொல்லுகிறது: - "மந்திர சபை பின்னாலேயே தள்ளி வைத்துக் கொண்டோம். இப்போது கதை நடக்குக" என்றது. உடனே, புரோகிதனாகிய அங்கிரன் என்ற பருந்து சொல்லுகிறது.

Wednesday, October 24, 2012

மலையாளம் (1)

மலையாளத்து ராகவ சாஸ்திரி என்பவர் நேற்று சாயங்காலம் மறுபடி என்னைப்பார்க்க வந்தார். நான் மௌன விரதம் பூண்டிருந்தேன். பிரமராய அய்யரும் 'பெண்-விடுதலை' வேதவல்லியம்மையும் ஏற்கனவே வந்திருந்தார்கள். மேனிலை முற்றத்தில் நல்ல தென்றல் காற்று வந்தது. அங்கு போய் உட்கார்ந்து கொண்டோம். அவர்கள் பேசினார்கள். நான் வாயைத் திறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பிரமராய அய்யர் ராகவ சாஸ்திரியை நோக்கி "மலையாளத்தி லிருப்போர் இந்தப்பக்கத்தாரைக் காட்டிலும் நல்ல சிகப்பு நிறமாக இருக்கிறார்களே. காரணமென்ன?" என்று கேட்டார். "குளிர்ச்சியான பூமி" என்று வேதவல்லியம்மை "

இதற்கொரு காலேஜ் மாணாக்கன், "நாங்கள்இந்தக் கதையை எல்லாம் நம்புவது கிடையாது. வைசூரிக்குப்பால் குத்திக் கொள்ளுகிறோம். பேதிக்கு உப்புக் கொடுக்கிறோமவிஷ ஜ்வரம், கொசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் தெரியாத பூச்சியால் உண்டாவதை அறிவோம். இவற்றை எல்லாம் தெய்வங்களின் கூட்டத்திற் சேர்க்கவில்லை" என்றுசொல்லக்கூடும். கொள்கை மாறக்கூடும். ஆனால் நாம் நமக்குநாயகராகாமல், புறத்தே ஓரதிகாரத்தை எப்போதும் குருட்டுத்தனமாக நம்பித் தொங்கும் குணம் நம்முடைய ஊக்கத்தை வேரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது நம் அறிவையும் உள்ளத்தையும் வசப்படுத்தி யிருப்பதால், நமதுமனம் கோழைப்பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால்,உலக முழுதும் தழுவிய மாற்றொணாத ஸ்ர்வவிதியை நாம் நம்புவதில்லை. ஐயப்படுதலும், 'எது வந்துவிடுமோ, நாம் எப்படிஒன்றைத் துணிவாகச் செய்யலாம்' என்று திகைப்பதும் பயத்தின்குணங்களாகும். நமது ராஜாங்கத்தாரிடத்திலே கூட இந்தக் குணம் சில சமயங்களில் காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திலேஎப்போதேனும் ஓட்டை யுண்டாகி. அதன் வழியே பயம் நுழைந்து அதனால் அவர்கள் தமக்கினியவாகிய ஸ்வதர்மங்களைமறந்து தம் ஆட்சியை உறுதியாகத் தாங்கும் வேர்க் கொள்கையைக் கோடரியால் வெட்டுகிறார்கள். அப்போது தர்மமும் நீதியும் ஒதுங்கிப் போய், கௌரவத்தைக் காப்பாற்றவேண்டுமென்கிற எண்ணம் முன்னே நிற்கிறது. தெய்வ விதியைமீறி அழுகைக் கண்ணீரை அந்தமான் தீவில் மறைத்துவிட்டால்கசப்பு இனிப்பாய்விடும் என்று நினைக்கிறார்கள். 'ஸகல ரோகாநிவாரணி' என்று தான் ஒரு மருந்தைப் பாவனை செய்துகொண்டு, உலகப் பொது விதியைச் சிலர் உல்லங்கனம் செய்வதற்கு இஃதொரு திருஷ்டாந்தம். இதற்கெல்லாம். உட்காரணம் அற்பத்தனமான "பயமும் தன்னலம் வேண்டலும்;அல்லது, அற்பத்தனமான சூதினால் நேர் வழியை விட்டு விலகமுயலுதல். இங்ஙனம் நாம் எண்ணத் தொலையாத அதிகாரிகளுக்கு, பூஜை நைவேத்தியம் பண்ணி குருட்டு அச்சத்தால், மானுஷீக உரிமைகளைப் புறக்கணிக்கிறோம். பௌதிகசாஸ்திரத்திலும் ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தனை உயர்வாகப் பரீக்ஷை தேறிய போதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய ஊறின வழக்கத்தை நம்மால் விட முடியவில்லை.தற்கால வழியை அனுசரித்து நாம் ஜனாதிகார சபைகள் ஏற்படுத்தினால் அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகனாகி மற்றவர்களை மேய்க்கும் தன்மை உண்டாகிறது. இதன் காரணம்யாதெனில், பொது ஜனங்கள் தன்னை மறந்திருத்தல், தூங்குதல்,உண்ணுதல், குடித்தல், கலியாணம் பண்ணுதல், பாடையேறுதலமுதலிய ஸகல காரியங்களையும் பிறருடைய ஆணைப்படியேசெய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-

ஸ்ரீ நாராயணஸ்வாமி என்பவர் தீயர் ஜாதியில் பிறந்து பெரிய யோகியாய் மலையிலே தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது பல தீயர் அவரிடம் போய், 'ஸ்வாமி, தங்களை மலையாளத்து மஹாராஜாகூட மிகவும் கௌரவப் படுத்தும்படி அத்தனை மேன்மையான நிலைமையிலே இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை இதர ஜாதியார் மிகவும் தாழ்ந்த நிலைமையிலே வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குப் போனால் மற்ற ஜாதியார் எங்களை வெளிப்புறத்திலே நிறுத்துகிறார்கள். நேரே ஸ்வாமி தர்சனம் பண்ண வழியில்லை. எங்களுக்கு ஒரு புகல் சொல்லக்கூடாதா? என்று கேட்டார்கள். அப்போது நாராயணஸ்வாமி சொல்லுகிறார்:

''கேளீர், ஸகோதரர்களே! கோயில் கட்டுவதற்கு நம்பூரிப் பிராமணர் தயவு வேண்டியதில்லை. கல் வேலை தெரிந்த கல்தச்சர் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் கோயில் கட்டிக் கொடுப்பார்கள். ஆதலால், நீங்கள் இந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டாம். பணம் சேர்த்துக்கொண்டு வாருங்கள். எத்தனை கோயில் வேண்டுமானாலும் கட்டலாம். நான் ப்ரதிஷ்டை பண்ணிக்கொடுக்கிறேன்" என்றார். இதைக் கேட்டவுடனே தீயர்கள் தமக்குள்ளிருந்த பணக்காரரிடம் தொகை சேர்க்கத் தொடங்கினார்கள். காலக்கிரமத்தில் பெரிய தொகை சேர்ந்தது. இப்போது பல இடங்களில் மேற்படி நாராயண ஸ்வாமி ஆலயப்ரதிஷ்டை செய்திருக்கிறார். என்று சாஸ்திரி சொன்னார்.

"இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதியார் வருத்தப்படவில்லையா?" என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

"ஆம். அவர்களுக்குக் கோபம் தான். ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு,"பெயரென்ன?" "என்று கேட்டார்.

"என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்" என்று நாராயணஸ்வாமி சொன்னார்.

"தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?" என்று நம்பூரி கேட்டார்.

''ஆம்'' என்று ஸ்வாமி சொன்னார். "பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?" என்று நம்பூரி கேட்டார்.

அதற்கு நாராயணஸ்வாமி:- 'பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப் படவேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை' என்றார்.

இவ்வாறு ராகவ சாஸ்திரி மேற்படி நாராயணஸ்வாமியைக் குறித்துப் பல கதைகள் சொன்னார். பிறகு மலையாள பாஷையின் ஆதிகவியாகிய துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரைப்பற்றி கொஞ்சம் வார்த்தை நடந்தது. எழுத்தச்சன் என்றால் எழுத்தின் அச்சன் (தந்தை) என்று பொருள். அந்த எழுத்தச்சன் எத்தனாவது நூற்றாண்டிலிருந்தான் என்ற கால நிர்ணயம் ராகவ சாஸ்திரிக்குத் தெரியவில்லை. இவர் பிறந்த கிராமத்தின் பெயர் ஏதோ சொன்னார்; அது எனக்கு மறந்து விட்டது. இக் காலத்திலே கூட அந்தக் கிராமத்துக்குப் பக்கத்து நாட்டுப்புறங்களிலே எங்கேனும் ஓரிடத்தில் பிள்ளைக்கு அக்ஷராப்யாஸம் பண்ணிவைத்தால் அதற்கு அந்தக்கிராமத்திலிருந்து மண்ணெடுத்துக்"கொண்டு வந்து அக்ஷரம் படிக்கும் சிறுவனுக்குக் கொஞ்சம் கரைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்று மேற்படி சாஸ்திரியார் சொன்னார். துஞ்சத்து எழுத்தச்சன் செய்த ராமாயணத்திலிருந்தும் சில புராணத்திலிருந்தும், மேற்படி ராகவ சாஸ்திரி, சில சுலோகங்களை எடுத்துச்சொல்லிப் பொருள் விளக்கினார். அதன் நடை பழைய தமிழ்; கொச்சையில்லாத சுத்தமான சம்ஸ்கிருதச் சொற்களையும் தொடர்களையும் யதேஷ்டமாகச் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழ் காதுக்கு மிகவும் ஹிதமாகத் தானிருக்கிறது. துஞ்சத்து எழுத்தச்சன் வாணிய ஜாதியைச் சேர்ந்தவராம். இவர் தமிழ் நாட்டிலே போய் கல்வி பயின்றவராம். இவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷயமாகப் பக்திப் பாட்டுகள் பல பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பாட்டுக்களை மலையாள ஸ்திரீகள் பாடும் போது கேட்டால் மிகவும் இன்பமாக இருக்குமென்று ராகவ சாஸ்திரி சொன்னார்.அவரே மாதிரி கொஞ்சம் பாடிக் காட்டினார்:

"கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்கேணும் விண்ணோர் புகழ்ந்த நாயிகே, மாயிகே, நீ"

என்று அந்தப் பாட்டின் முதற்கண்ணி சொன்னார். அதாவது:-

'கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்க வேணும், விண்ணோர் புகழும் நாயிகே' என்றவாறு.

''நாயிகே'' என்பது வடசொல். ''நாயகியே என்பது பொருள். ''மாயிகே'' என்றால் ஹே மாயாதேவி என்று அர்த்தம். இது பராசக்தியை நோக்கி கோபிகள் தமக்கு கண்ணனைத்தரும்படி வேண்டிய பாட்டு.

இங்ஙனம் அவர்கள் நெடுநேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள். பிரமராய அய்யர் கடைசியாக "ஹிந்து தேசமாகிய ரத்ன மலையில் மலையாளம் ஸாமான்ய ரத்னமன்று" என்றார்.

பிறகு வேதவல்லியம்மை அச்சிகளைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். ஏற்கனவே, ஐரோப்பிய ஸ்திரீகளுக்கு உள்ள விடுதலை (நாயர் ஸ்திரீகளாகிய) அச்சிகளுக்கு உண்டென்று வெளிப்பட்டது. வேதல்லியம்மைக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. பிரமாயர் பெருமூச்சு விட்டார். உடனே பிரமராய அய்யருக்கும் வேதவல்லிக்கும் சண்டை உண்டாயிற்று. இந்த வியாஸம் ஏற்கனவே நீண்டுபோய்விட்ட படியால், மேற்படி பிரமராயர் வேதவல்லி யுத்தக் கதையை ஸௌகரியப்பட்டால் மற்றொரு முறை எழுதுகிறேன்.

Tuesday, October 23, 2012

மாலை (2)

"ஆணி முத்தைப் போல அறிவு முத்து மாலையினாள்."

ஐரோப்பிய ஸங்கீதம், ஹிந்து ஸங்கீதம் இரண்டையும் பற்றித் தமது கொள்கைகளை வங்கத்துப் புலவராகிய ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூர் தமது சரித்திரக் குறிப்புகளிலே எழுதியிருக்கிறார். இவர் இளவயதிலேயே பல வருஷம் இங்கிலாந்தில் வாஸம் செய்தவர்; குழந்தை முதலாகவே நல்ல ரஸிகர். இவருடைய வார்த்தைகள் மதிப்புக்குரியன.

ரவீந்திரநாதர் சொல்லுகிறார்:-

"குரலைப் பழக்குவதில் நமது தேசத்துப் பாட்டுக்காரரைக் காட்டிலும் மேற்கு நாட்டுப் பாடகர் மிகவும் சிறப்புடையோர். அவர்களுக்குத் தொண்டை வசப்பட்டிருப்பது போலே, இங்கு இல்லை. நம்மவர்களிலே உயர்ந்த பாட்டுக்காரர் பாடும்போதுகூட 'இவர்கள் "சிரமப்படுகிறார்கள்' என்ற விஷயம் வெளியே தெரிந்து விடுகிறது. யாதொரு சிரமமும் காட்டாதபடி மழை பெய்வது போலே இயற்கையாகப் பாடும்படி நம்மவர் சாரீரத்தைப் பழக்கவில்லை. சில சமயங்களில் மேல் ஸ்தாயியிலும் தமக்கு எட்டாத ஸ்வரங்களைத் தொட முயற்சி செய்கிறார்கள். ஐரோப்பாவில் பாட்டுக்கு வெளியேறுவோரின் தொண்டை, வல்லவன் வாசிக்கும் வாத்தியம் போலே, ஒரு குற்றம், ஒரு அபசப்தம், ஒரு கரகரப்பு, ஒரு பிழை இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு தொண்டையைப் பயிற்சி செய்யாதோர் அங்கே பாடுவதாக வெளிப்பட மாட்டார்கள்.

"நம்மவர்கள், பாட்டுக் கச்சேரி வந்தால், சபைக்கு வந்த பிறகுதான் தம்பூர் சேர்ப்பதும் மிருதங்கத்தைத் தட்டித் தட்டி ஒத்திட்டுப் பார்ப்பதும் ஏதெல்லாமோ ஒரு மணி நேரத்து வேலைசெய்கிறார்கள். இந்த நீண்ட ஹிம்ஸையை சபையோர் சும்மா பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலே அப்படியில்லை. கருவிகளை யெல்லாம் சபைக்கு வருமுன்பாகவே நேர்படுத்தி வைத்துக்கொண்டு சபைக்கு வந்த உடனே பாட்டுத் தொடங்குகிறார்கள்.

"நம்மவர்கள் வர்ணமெட்டு சரியா என்பதையே பிரதானமாகப் பார்க்கிறார்கள். அங்குள்ளோர் குரலையே முதலாக வைத்துக் கொண்டு ஆச்சரியமாக வேலை செய்கிறார்கள்.

"எனக்கு ஐரோப்பிய ஸங்கீதம் ரஸப்படவில்லை; நன்றாகத்தானிருக்கிறது; ஆனால், "ஸர்க்கஸ்" வேடிக்கை எப்படி ஒழுங்காகவும் நன்றாகவுமிருக்கிறதோ அதே மாதிரி. ஒரு பெரிய பாட்டுக்காரி இங்கிலாந்தில் கச்சேரி நடத்தும் போது நான்கேட்கப் போனேன். பாடிக்கொண்டு வரும் போதே பக்ஷிகள் கத்தும் ஒலிகளைக் காட்டத் தொடங்கினாள். எனக்கு சிரிப்புப் பொறுக்க முடியவில்லை. பெருங்கேலியாக இருந்தது. ஆண் பாட்டு இத்தனை மோசமில்லை.

"நெடுநாள் பழக்கத்தினால் இப்போது எனக்கு ஐரோப்பிய ஸங்கீதத்தின் பொருள் விளங்கத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய ஸங்கீதத்தின் வழி வேறு, அவர்கள் வழி வேறு. அது ஜடம்; நம்முடையது ஸூக்ஷ்மம். அது லௌகீகம்;நமது பாரமார்த்திகம். அந்த ஸங்கீதத்திலே மானுஷீக சக்திஅதிகமிருக்கிறது; நமது ஸங்கீதத்திலே தெய்வசக்தி விளங்குகிறது."

மேலே ரவீந்திரர் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்க்கவில்லை. ஸாராம்சத்தை எனது பாஷையில் எழுதியிருக்கிறேன். 'நம்முடைய ஸங்கீத சாஸ்திரம்ஐரோப்பிய சாஸ்திரத்தை விட மேலானது' என்று ரவீந்திரர் சொல்லும் வார்த்தை முழுவதும் உண்மையென்பது இரண்டு முறைகளிலும் பழக்கமுடைய பண்டித ரெல்லாருக்கும் தெரிந்த விஷயமேயாம். ஆனாலும், நமது தேசத்து வித்வான்கள் கண்டப் பயிற்சி, ஸபா நாகரீகம் என்ற அம்சங்களில் ஐரோப்பியருக்கு ஸமானமாகும்படி முயற்சி செய்தால் நல்லது. ஜனங்களுக்கு இன்பம் அதிகப்படும்; பாடுவோருக்கு பணம் அதிகப்படும்.

Monday, October 22, 2012

டிண்டிம சாஸ்திரியின் கதை

இன்று காலை பொழுது விடிய இரண்டு நாழிகைக்கு ஒருவர் வந்து என் வீட்டுக்கதவை இடித்தார். நான் போய்க் கதவைத் திறந்து பார்த்தேன் கையில் ஒரு லாந்தர் வைத்துக் கொண்டிருந்தார். நெற்றியிலே ஸ்ரீ சூர்ணம், தலையில் பாகை; உடம்பில் முழந்தாள் வரை நீண்ட பெரிய கர்நாடக உடுப்பு; காலில் பாதக் குறடு; கையில் தும்பிக்கை போலே ஒரு தடி. "யார்? எந்த ஊர்?" என்று கேட்டேன்.

அப்போது அவர் சொல்லுகிறார்;- "நான் வசிப்பது கும்பகோணம் என் பெயர் டிண்டிம சாஸ்திரி. வேதபுரத்தில் ஸ்வாமி தெரிசனத்துக்காக வந்தேன். தங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நெடுநாளாக இருந்த ஆசையை "இப்போது தீர்த்துக் கொண்டேன்" என்றார்.

''சரி'' என்று சொல்லி நான் அவரை உள்ளே அழைத்து வந்தேன். மேல் மெத்தையில் குழந்தை குட்டிகள் தூங்கிக்கொண்டிருந்தபடியால். கீழேயே கூடத்தில் ஒரு பிரப்பம்பாயை விரித்தேன். விளக்கேற்றினேன். டிண்டிமரும் நானும் உட்கார்ந்து கொண்டோம். டிண்டிம சாஸ்திரி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியை எடுத்தார். நானும் அவரும் வெற்றிலை போட்டுக் கொண்டோம். அப்போது டிண்டிமர்:- "தாங்கள் பிரஹ்மபத்ரம் (புகையிலை) போடுவது கிடையாதோ?" என்றார்.

நான் சொன்னேன்:- 'கிடையாது, ஸ்வாமி; முன்னெல்லாம் நாளொன்றுக்கு மூன்று தூக்குப் புகையிலை சவைத்துத் துப்பிக்கொண்டிருந்தேன். இரண்டு வருஷகாலமாக அவ்வழக்கத்தை நிறுத்தி விட்டேன்" என்றேன்.

"சரிதான்" என்று சொல்லி லேசாக நகைத்து விட்டு, டிண்டிம சாஸ்திரி தம்மிடமிருந்த புகையிலை டப்பாவைத் திறந்து அதற்குள்ளிருந்த சுகந்தபரிமள புகையிலையை ஒரு கொத்து, எலுமிச்சங்காய் அளவு, கையில் எடுத்து வாய்க்குள்ளே திணிக்கக் மாட்டாமல் திணித்துக் கொண்டார்.

இரண்டுதரம் எழுந்து வெளியே எச்சில் துப்பிவிட்டு வந்தார். மேலே இருந்த பட்டையையும் தலையில் இருந்த பாகையையும் கழற்றிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்: "முந்தி ஒரு தடவை 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் மலையாளத்திலிருந்து தீய ஜாதியைச் சார்ந்த 'ராகவ சாஸ்திரி, என்ற மனுஷ்யன் வந்ததாகவும், அவர் மலையாளத்து நம்பூரிப்பிராமணர்களைத்தூஷித்துப் பேசியதாகவும் தாங்கள் எழுதியிருந்தீர்கள். நான் அதற்கப்புறம் மலையாளத்துக்குப் போய் பல நம்பூரிப் பிராமணர்களைக் கண்டேன். அவர்களெல்லோரும் மஹா யோக்கியர்கள். "தீயர்களைக் கஷ்டப்படுத்துகிற நாயர்களைக் கஷ்டப்படுத்தினார்களே யென்றாலோ, அதுவெல்லாம் பழைய கர்மம். அதனால் உண்டான பாவபயன்களை அவர்கள் அனுபவித்தார்கள்; இப்போதும் அனுபவிக்கிறார்கள். சந்திரனிலே கூட மாசு தோன்றுகிறது. அதுபோல், உலகத்திலும் எந்த ஜாதியாரிடத்திலும், குற்றம் கண்டு பிடிக்கப் போனால், குற்றம் இருக்கத்தான் செய்யும். ''குற்றம் பார்க்கில் சுற்றமில்லை'' என்று ஓளவையாரே சொல்லியிருக்கிறார்கள். மேற்படி ஓளவையாரைக் குறித்து நான் மலையாளத்தில் கேள்விப்பட்ட புதுமைகளைத் தங்களிடம் சொல்லவேண்டுமானால், அது வேறு பெரிய கதையாக நீளும். நம்பூரிப் பிராமணர்களை மொத்தமாகக் கவனிக்கும்போது நல்ல ஸாதுக்களாகவே யிருக்கிறார்கள். அவர்களுடைய யோக்கியதை இக்காலத்தில் சோபிக்க இடமில்லை. முதலாவது, அவர்களுக்கு நவீன லௌகீகக் (அதாவது ஐரோப்பியக்) கல்வியில்லை. அது ஓர் ஊனம். ஆனால், அதை அவர்கள் சீக்கிரத்தில் நிவிர்த்தி செய்து கொள்வார்கள்.

ஒரு நம்பூரி என்னிடம் சொன்னார்:- "இங்கிலீஷ் பாஷையிலுள்ள சாஸ்திரங்களைத் தெரிந்து கொள்வதில் அவர்களுடைய வைதீக நெறிக்கு யாதொரு விரோதம் கிடையாதென்றும், ஆனால், இங்கிலீஷ் பாஷையைப் படித்தால் தான் தோஷமென்றும், ஆதலால் இங்கிலீஷிலிருந்து மேற்படி சாஸ்திரங்களை யாராவது தர்ஜமா பண்ணி போட்டால் "நம்பூரிமார் வாசிப்பதும் அல்லாமல் மேற்படி சாஸ்திரங்களில் அதுல்யமாகபாண்டித்யம் பெறுவார்கள் என்றும், நம்பூரியின் புத்திக்கு ஸமானமான தீக்ஷ்ணம் இந்த லோகத்தில் வேறு எந்த ஜாதியாருக்கும் கிடையாது என்றும் அந்த நம்பூரி சொன்னார்."

இங்ஙனம் டிண்டிம சாஸ்திரி கதை சொல்லி வருகையில் நான் இவரிடம்:- "ஸ்வாமி, தாங்கள் என்ன ஸ்மார்த்தரா வைஷ்ணவரா, விஷயம் தெரியவில்லையே. நெற்றியில் நாமம் இல்லை; ஸ்ரீசூர்ணம் மாத்திரம் தெரிகிறது. வைஷ்ணவர் சாஸ்திரி என்று பெயர் வைத்துக்கொள்வதில்லையே" என்றேன்.

அதற்கு டிண்டிம சாஸ்திரி:- "நான் ஸ்மார்த்தன் தான். கீற்று நாமக்காரன். நாங்கள் லேசாக நாமம் போடுவோம். நேற்று மத்தியானம் சார்த்தினபடியாலே திருமண்கலைந்துபோய் ஸ்ரீசூர்ணம் மாத்திரம் தெரிகிறது. ஸ்ரீரங்கத்துக் கோயிலில், ஸ்மார்த்தர் நாமம் போட்டுக்கொண்டு பரிசாரகம் செய்கிறார்கள். அனேக ஜில்லாக்களில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

நம்பூரிப் பிராமணரைப் பற்றி நான் பிறந்தது முதல் இன்றுவரை நீர் ஒருவர்தான் ஸ்தோத்திரம் பண்ணக்கண்டேன். இதுவரை எங்கே போனாலும் நம்பூரியைத்திட்டுவார்களே யொழிய, நம்பூரி நல்லவன் என்று யாரும் சொல்வது கிடையாது" என்று நான் சொன்னேன்.

அப்போது டிண்டிம சாஸ்திரி சொல்லுகிறார்: - ஐயோ, ஸ்வாமி! ஐயோ, ஸ்வாமி! ஐயோ, ஸ்வாமி! தங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் இந்த ஸங்கதி மாத்திரம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்! மலையாளத்தில் தெய்வம் நேரேபேசுகிறது, ஸ்வாமி. அங்கே நல்ல பாம்புகள் மனுஷ்யருடைய காலைச்சுற்றிவரும், கடிக்காது. பதிவிரதைகள் அந்தப் பாம்புகளை வசப்படுத்திப் போட்டார்களாம்.

"நம்பூரி என்றால், ''நம்பிஸ்ரீ'' என்ற பட்டத்தின் திரிதல் விகாரம். பாலக்காட்டில், எனக்கு ஒரு நம்பூரிப் பிராமணர் ஸ்நேகிதராக இருந்தார். அவருக்கு அவ்வூர் வக்கீல் ஒருவர் சொல்லிய சில சரித்திர சம்பவங்களை அவர் எனக்குச் சொன்னார்.

"152-ம் வருஷத்தில் கொச்சி ராஜா ஐம்பதினாயிரம் நாயர் படையும் சில போர்த்துகீசிய பீரங்கிப் பட்டாளமும் சேர்த்துக்கொண்டு கோழிக்கூட்டு (கள்ளிக்கோட்டைத்) தம்பிரான் "மேலே படையெடுத்து வந்தார். அப்போது தம்பிரானைச் சேர்ந்த பிராமணர்கள் கூட்டம் கூடி கொச்சி ராஜா அன்னியருடன் சேர்ந்துகொண்டு பிராமண சத்துருவாக மூண்டதுபற்றி அவனைச் சாபமிட்டார்கள். பிராமண சாபத்துக்கிடமான ராஜாவுக்கு ஐயம் கிடையாதென்று தீர்மானித்துக் கொச்சிராஜனுடன் வந்த ஐம்பதினாயிரம் போர்த்துகீசியர் முகத்தை நோக்கப்போர்த்துகீசியர் கடலை நோக்கத் தம்பிரான் தலை பிழைத்தது.

"திப்பு சுல்தான் காலத்தில்தான் முகம்மதிய ஸேனாதிபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரிந்து நிற்கும்படி செய்வித்து பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தை சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப்போய் விட்டதாக புல்லர்டன் என்ற இங்கிலீஷ் சேனாதிபதி எழுதிவைத்திருக்கிறான். இச்சங்கதி களெல்லாம் ''லோகன்'' எழுதின ''மலபார் மானுயல்'' புஸ்தகத்தில் போட்டிருக்கிறதாம். அந்தக் காலத்து போர்த்துகிசிய வைஸ்ராய், ''ஆல்பான்ஸோ ஆல்புகர்க்'' என்பவன் கொச்சி ராஜாவிடம் சொன்னானாம்: ''இனிமேல் இந்த ராஜ்யத்தில் பிராமணவாக்கு செல்லாது. இனிமேல் அன்னியனுடைய கோலுக்கு வணங்க வேண்டும்'' என்று சொன்னானாம்.

"திப்பு சுல்தான் கோழிக்கூட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முஸ்லீம் ஆக்கிகோமாம்சம் புசிக்கச் செய்தானானாம். அவனை எதிர்க்கத் திறமையில்லாமையால் கோட்டயம் ராஜாவும் கூத்தாட்டு ராஜாவும்இங்கிலீஷ்காரருக்கு விண்ணப்பஞ் செய்தார்கள்: - "நீங்கள் பிராமணர்களையும் ஏழைகளையும் ராஜ்ய முழுவதையும் காப்பாற்ற வேண்டும்" என்று. இங்ஙனம் மேற்படி டிண்டிம சாஸ்திரி எத்தனையோ விதமான கதைகள் சொன்னார். அவர் சொன்ன விஷயங்களை யெல்லாம் பின்னிட்டு "நம்பூரிமார்" என்றுதனிக்கதை எழுதுவேன். அதிலே சொல்லுகிறேன். இது நிற்க, காலை தோசை தின்று பால் சாப்பிட்டு விட்டுத் தாம்பூலம் தரித்துக்கொண்டு டிண்டிம சாஸ்திரி என்னிடம் விடைபெற்றுச் சென்றார். அவர் போய் பத்து நிமிஷத்துக்கெல்லாம் பழையராகவ சாஸ்திரி முன்போல ஐரோப்பிய உடை தரித்துக்கொண்டு வந்து ப்ரஸந்நமானார்.

அவர் யார் ஞாபகமிருக்கிறதா? ஆதியில் இந்த ராகவ சாஸ்திரி என்னிடம் வந்து நம்பூரியைப் பழித்துப் பேச அதை நான் சுதேசமித்திரன் பத்திரிகைக் கெழுத, அதைப் பார்த்துத் தான் டிண்டிம சாஸ்திரி என்னை உணர்ந்து வந்தார். ராகவசாஸ்திரி வந்தவுடன் நான் அவரிடம் டிண்டிமர் வந்துவிட்டுப்போன விருத்தாந்தங்களையெல்லாம் சொன்னேன்.

அப்போது ராகவ சாஸ்திரி கடகடவென்று சிரித்தார். இவர் கையில் "ரயில் பை" கொண்டு வந்திருத்தார். அதை எடுத்துக்கொண்டு "நான் மெத்தையிலே போய்த் தனியாக ஐந்து நிமிஷம் இருக்கவேண்டும்" என்று சொன்னார்.

"அதற்கு என்ன, செய்யும்" என்றேன். தனியாகப் போயிருந்தார். திரும்பி வரும் போது பார்த்தால் பூட்ஸ் எல்லாம் போய், ஸ்ரீசூர்ணம், தலைப்பாகை ஸஹிதமான டிண்டிமசாஸ்திரி வந்து தோன்றினார், ''இதென்னடா வேடிக்கை'' யென்று தீரவிசாரணை செய்யும்போது, ஒரே ஆசாமி ராகவ சாஸ்திரியாகவும் டிண்டிம சாஸ்திரியாகவும் இரண்டு வேடந் தரித்து எனக்கு நம்பூரிகளுடைய விஷயத்தில் கோபம் அதிகப்படும்படி செய்வதற்காக இப்படி விளையாடினார் என்று தெரியவந்தது.அவர் பிறப்பில் தீயரில்லை. நம்பூரிதான் என்றுந் தெரியவந்தது.

Sunday, October 21, 2012

காலக் கண்ணாடி



15 மார்ச் 1921                                         ரெளத்திரி பங்குனி 2

சமாசாரப் பத்திரிகைகள் 

இங்கிலாந்தில் சில முக்யமான வாசகசாலைத் தலைவர் இவ்வருஷத் தொடக்கத்தில், மற்றப் பழம் பத்திரிகைகளை விலைக்குக் கொடுத்தது போல், “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையை மட்டும் கொடுக்காமல் உலக சரித்திரத்துக்கு ஆதாரமாகச் சேகரித்து வைத்தார்களென்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அத்தகைய பதவி நம் சுதேசமித்திரனுக்குக் கடவுள் அனுக்ரஹம் செய்யும்படி பிரார்த்திக்கிறேன். வர்த்தமானப் பத்திரிகைகளின் நிலைமை பொதுப்படையாகவே நாள்தோறும் ஏறிக்கொண்டு வருகிறது. உலகத்து ராஜ்ய தந்த்ரங்களுக்குப் பொதுஜன ஆதரவு அவசியமென்ற விதி பலப்பட பலப்படப் பத்திரிகைகளின் சக்தி மிகுதிப் பட்டுக் கொண்டு வருகிறது. வியாபாரிகளுக்கு வர்த்தமானப் பத்திரிகை இன்றியமையாத விளக்காய்விட்டது. கைத்தொழில் வளர்ச்சிக்கும் பத்திரிகைகள் தூண்டுதலாகி வருகின்றன. இலக்கியத் துறையிலும் பத்திரிகைகள் மேன்மேலும் மாண்புயர்ந்து வருமென்று தோன்றுகிறது. 

பாரமார்த்திக தர்சனம்

இங்ஙனம் லெளகிக வெற்றியை வேண்டுவோருக்கு மாத்திரமே பத்திரிகை முக்யமானதென்று கருதல் வேண்டா. “அவனின்று ஓரணுவும் அசையாது” என்ற பெரியோரின் வாக்குப்படி உலகத்து நிகழ்ச்சிகளெல்லாம் கடவுளுடைய செயல்களேயாதலால், பத்திரிகை படித்தல் தெய்வ பக்தியுடையோருக்கும் பேராநந்தம் விளைத்தற்குரியது. கடவுள் மனித உலகத்தை எங்ஙனம் நடத்திச் செல்கிறனென்பதை விளக்குவதே சரித்திரப் பயிற்சியின் மேலான பயனென்று பூர்வாசார்யர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அங்ஙனமாயின், இந்த அம்சத்தில் சரித்திர நூல்களைக் காட்டிலும் பத்திரிகைகள் பன்முறை அதிகமான பயன் தருமென்பதில் ஐயம் சிறிதேனுமுண்டோ?

ஆனால் தற்காலப் பத்திரிகைகளில் பக்ஷபாத குணம் அதிகமாகக் காண்பிக்கப்படுகிறது. தேசப் பஷபாதங்களும் கக்ஷிப் பிரிவுகளும் மலிந்து கிடக்கின்றன. இவற்றை நீக்கிவிட்டால் பத்திரிகையின் மஹிமை இன்னும் நெடிதோங்கி வளர இடமுண்டாகும். இதனிடையே, இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸமாகச் செல்லும் திறமை – இவற்றில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப் பத்திரிகைகளின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத்துக்கிடமாக இருக்கிறது. கடிதங்களெழுதுவோரில் பலர் இலக்கணப் பயிற்சிகூட இல்லாமல் பத்திரிகைக் கெழுதத் துணிகிறார்கள். அவற்றைப் பத்திராதிபர்கள் சில ஸமயங்களில் பிழைகளையாமலே ப்ரசுரம் செய்து விடுகிறார்கள். இதுவுமன்றி இலக்கணப் பயிற்சியற்ற சிலர் பத்திராதிபராக இருக்கும் விநோதத்தையும் இந்நாட்டிலே காண்கிறோம். நவீன நாகரிகத்தின் முக்யச் சின்னங்களிலொன்றாகிய பத்திரிகைத் தொழிலில் நாம் மேன்மை பெற வேண்டுமானால், மேற்கூறப்பட்ட பிழைகளைத் தீர்த்துக் கொள்ளக் கடவோம்.

தொழிலாளர் கிளர்ச்சி

சில தினங்களின் முன்பு பெல்ஜியத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொழிலாளிகள் கைப்பற்றிக் கொண்டார்களென்று ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. எனவே பொது உடமைக் கக்ஷி என்ற காட்டுத் தீ ஐரோப்பா என்ற மனுஷ்ய வனத்தில் ருஷியா முழுவதையும் சூழ்ந்து கொண்டதுமன்றி மற்ற இடங்களிலும் அங்கங்கே திடீர் திடீர் என்று வெடித்துக்த் தழல் வீசி வருவது காண்கிறோம். போல்ஷெவிஸ்ட் கொள்கையை மத்ய ஆசியாவில் பரவவிடக் கூடாதென்றெண்ணும் ஆங்கிலேய மந்திரிகள் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்த்ரியா, துருக்கி, ப்ரான்ஸ் முதலிய நாடுகளில் மிகுதியாகவும், இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க் முதலிய தேசங்களில் சற்றே மட்டாகவும் அக்கொள்கை வியாபித்து வருவதை எங்ஙனம் ஸஹிக்கிறார்களென்பது புலப்படவில்லை. என்ன செய்யலாம்? ஆங்கிலேயப் பழங்கதை யொன்றிலே சொல்லப்பட்டதுபோல, கான்யூட் ராஜா சொல்லுக்குக் கடல் கீழ்ப்படிந்து நடக்குமா?

ஜப்பானில் ஜாதி பேதம்

நான் ஜாதி பேதத்துக்கு நண்பனல்லேன். இந்தியர்களெல்லாரும், அல்லது ஹிந்துக்களெல்லாரும் ஒரே ஜாதி யென்ற ஸாதாரண இங்கிலிஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் அனுஸரிக்கவில்லை. உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே ஜாதி “வஸுதைவ குடும்பம்” என்ற பர்த்ருஹரியின் கொள்கையைத் தழுவியுள்ளேன். மனித ஜாதியும் மற்ற ஜந்து ஸமூஹங்களும் ஒரே குடும்பமென்ற (d) டார்வின் என்னும் ஆங்கில சாஸ்திரியின் கருத்தைப் பின் பற்றுகிறேன். எல்லா ஜீவர்களும் கடவுளுடைய அம்சமென்ற பகவத்கீதையின் பரமோபதேசத்தைக் கடைப் பிடித்து நிற்கிறேன். ஒரு பிராமணனை, ஒரு ஆங்கிலேயனை, ஒரு ஆட்டைக் கொல்லுதல் அல்லது அடிப்பதால் எய்தும் பாவம் ஒரே மாதிரி உபசரிப்பதால் அல்லது வணங்குவதால் எய்தும் புண்யமும் ஒரே தன்மையுடையது. இஃதென் உண்மையான, யான் ஒழுக்கப்படுத்தி வருகிற கொள்கை. எனிலும் ஜாதி பேதம் தொலையும் வரை நாம் ஸ்வராஜ்யம் புரியத் தகுதி பெறமாட்டோம் என்ற சொல்வோருடைய பேச்சுக்காசு பெறாதென்பதை நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன். திருந்தமாக, ஸமீபகாலத்தில் கிடைத்த டோக்யோத் தந்திகளினின்றும் அங்கு பரம நீதி ஸபை (ப்ரவி கெளன்ஸில்) அக்ராஸனாதிபதியான யமகாடாபிரபு என்பவரும், வேறு பல அரண்மனை அதிகாரிகளும் ராஜிநாமாக் கொடுத்துவிட்டார்களென்று தெரிகிறது. இதன் காரணம் யாதென்றால் பூர்வகால முதலாக ஐந்து பழைய குடும்பங்களிலிருந்து மட்டுமே சக்ரவர்த்தி வம்சத்தார் பெண்ணெடுப்பது வழக்கமாக நடைபெற்று வந்திருக்க, இப்போது அந்த வழக்கத்துக்கு மாறாகப் பட்டத்திளவரசருக்கு அவ்வைந்து குடும்பங்களில் சேராத சேனாதிபதி கூனி இளவரசர் என்பவரின் மகள் இளவரசி நாகாகோ என்பவளை மணம் புரிய நிச்சயித்திருப்பதேயாம். ஜப்பானியப் பரம நீதி ஸபைத் தலைவர் எவ்விதமான ஜாதிபேதம் பாராட்டுகிறார் பார்த்தீர்களா! விவாக ஸம்பந்தமான இடையூறுகளை உத்தேசித்தே யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்களான நாகரிக சிகாமணிகள் தமது களவாண்ட தேசத்தில் ஜப்பானியர் அடியெடுத்து வைக்கக் கூடாதென்று கூக்குரல் போடுகிறார்கள். மற்றப்படி வெள்ளை ஜாதியர்களுக்குள்ளே இருக்கும் விவாகத் தடைகள் பல. ஜாதி பேதமாவது முக்யமாக விவாகத்தடை; இரண்டாம் பக்ஷம் ஸமபந்தி போஜனத்தடை. இவையிருத்தல் தவறு, ஆனால் இவை ஸ்வராஜ்ய ஸ்தாபனத்திற்கு விரோத மென்று கூறுவோர் பச்சை அறியாமையாலே அங்ஙனம் சொல்லுகிறார்கள்.

Saturday, October 20, 2012

மாலை

அலங்கார சாஸ்திரம்

எல்லாவித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர வேறொன்றுமில்லை; 'உபமாலங்காரமே அலங்கார சாஸ்திரத்தின் பிராணன்? என்று பழைய இலககணக்காரர் சொல்லுகிறார்கள்.

பிரான்ஸ் தேசத்தில் மஹாகீர்த்தி பெற்று விளங்கிய நெப்போலியன் சக்ரவர்த்தியின் மதம் அப்படியன்று. "உவமையணி விரிவணி ஒன்றும் பெரிதில்லை. புனருக்தி (மீட்டுரை) தான் மேலான அலங்காரம். அதாவது, நம்முடைய கக்ஷியைத் திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும். எதிராளி சொல்லும் பேச்சை கவனிக்கவே கூடாது. நம்முடைய கக்ஷியை ஓயாமல் திரும்பச்சொல்லவேண்டும். அடிக்கடி எந்த வார்த்தை சொல்லுகிறோமோ அந்த வார்த்தை மெய்யாய்ப் போகும்" என்று நெப்போலியன் "சொல்லியதாக ஒரு கதை. லௌகீக காரியங்களிலே இது நல்ல உபாயம் நம்முடைய நியாயத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லுவதினால், பொய் கூட மெய்யாகத் தோன்றும்படி செய்துவிடலாம்.

குண்டூசி வியாபாரம்

ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக் கடையிலே ஒருவன் வாழைக்காய் வியாபாரம். அவனைப் பார்த்து குண்டூசி வியாபாரியும் பகல் வெயில் நேரத்தில் அரைத் தூக்கமாய் கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக் கொடுக்கும் வழக்கத்தைக்கற்றுக்கொண்டான். ஒருநாள் பகல் வெயிலில் குண்டூசிக்காரன் அரைக் கண்ணைத் திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டூசி டப்பியொன்று இருக்கிறது. இவன் கனவிலே ஒரு பெண் வந்தாள். அவள் வந்து தன் புருவத்திலும் கண்ணிமையிலும் ஜவ்வாது தடவுவதாகக் கனாக் கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்ணிலே கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில் நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக்கூடாது.

தூற்றல்

ஓயாமல் தூற்றல் போட்டால் அது மழையாக மாட்டாது. சிணுங்கல் மழையினால் கெடுதிதான் உண்டாகும். தூற்றலாகத் தொடங்கியது மழையாக விரைவிலே பெய்து முடித்துவிடவேண்டும். ஒரு நல்ல காரியம் செய்யத் தொடங்குவோன், அதை ஒரே நீட்டாக வருஷக் கணக்கில் நீட்டி, மற்றவர்களுக்கு அதுவே ஒரு தீராத தொல்லையாகும்படி செய்யலாகாது. "சுபஞ்ச சீக்கிரம்"; நன்மையைத் துரிதப்படுத்தவேண்டும்.

வசனநடை

தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.

பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழகமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப்பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும்வழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக்கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன்யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால், பின்பு ஸங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதில் கட்டி முடிந்த வசனங்களையேஎழுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடுபோல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும்; வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுதிருக்காது. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்கவேண்டும். இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக்கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.

தமிழ் நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்

தமிழ் நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லையாதலால், சங்கடம் நீங்காமலிருக்கிறது. புதிய புஸ்தங்களைப் படித்துப்படித்து, ''பயன்படுமா படாதா'' வென்று தீர்மானம் செய்யவேண்டும். ''நன்றாக விலையாகுமா விலையாகாதா'' என்பதை ஊகித்தறியவேண்டும். ஆசிரியரிடமிருந்து புஸ்தகத்தை முன் விலையாகவோ, வேறுவித உடன்பாடாகவோ, வாங்கிக்கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு லாபம் பெறவேண்டும். இந்த வியாபாரத்தை நமது தேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. "பெருந்தொகையான ஜனங்கள் வாங்கிப் படிக்கத் தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பணமுள்ளவர் எழுதும் புஸ்தகங்களே பொதுஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சரியமானவை பல எழுதப்பட்ட காலத்தில், ஆசிரியர் தனவந்தராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினால், பிரசுரவியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேகமில்லை.

விக்டர் ஹ்யூகோ என்ற பிரெஞ்சு ஞானியின் வசனங்கள்

தெய்வம் எப்படிப் பேசுகிறது?

உலகத்தில் நடைபெறும் செய்திகளை யெல்லாம் கடைந்து பார்க்கவேண்டும். அதன் ஆணைகள் தெளிவுபடும். ஆனால் இது ரஹஸ்ய பாஷை; எளிதில் அர்த்தமாகாது. சாதாரண மனிதர் இந்தப் பாஷையை மொழிபெயர்க்கத் தொடங்கினால், அதிலே பிழைகள் போடுகிறார்கள்; அவஸரப்படுகிறார்கள். முன்பின் முரணுகிறார்கள்; இடையிடையே சில அமிர்தங்களை விட்டு விடுகிறார்கள்.

அறிவுடையோர், பொறுமையுடையோர், ஆழ்ந்து சிந்தனை செய்வோர்-இவர்கள் பரபரப்புக்கொள்ளாது, காத்திருந்து காத்திருந்து, மெல்ல மெல்ல மொழிபெயர்த்துப் பார்க்கிறார்கள். இவர்களுடைய மொழிபெயர்ப்பிலே உண்மை அகப்படுகின்றது.

ஸமத்துவம் என்பது யாது?

ஸமத்வக் கொள்கையிலே இரண்டு செய்திகளைப் பற்றிய விசாரணை யுண்டாகிறது. முதலாவது, செல்வத்தை உண்டாக்குதல். இரண்டாவது, அதைப் பங்கிட்டுக் கொடுத்தல்.முதலாவது செய்தியில் தொழிலைப் பற்றிய ஆராய்ச்சி ஏற்படுகிறது. இரண்டாவது செய்தியில் கடவுளைப் பற்றிய பேச்சு.

முதல் விஷயம் திறமைகளின் உபயோகத்தைப் பற்றியது.

இரண்டாம் விஷயம் இன்பங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதைப் பற்றியது.

திற்மைகளை உபயோகப்படுத்துவதினாலே ஜன வலிமையுண்டாகிறது.

இன்பங்களை நேரே வகுத்தால் ஒவ்வொருவனுக்கும் இன்பம் உண்டாகிறது.

நேரே வகுத்தல் என்றால் ஒன்று போல் வகுத்தல் என்று அர்த்தமில்லை. நியாயமாக வகுத்தல் என்று அர்த்தம். நியாயமே ஸமத்வத்தின் பெயர். நியாயமே முதலாவது ஸமத்வம்.

மேலே கூறிய ஜன வலிமை, ஸர்வஸுகம், என்ற இரண்டும் சேர்ந்தால் ஜனச்செம்மை ஏற்படுகிறது.

ஜனச் செம்மை எப்படியிருக்கும்?

மனிதன் செல்வவானாவான். குடிகள் விடுதலை பெற்றிருப்பர். நாடு உயர்வு பெற்றிருக்கும்.

காதல்

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது; ஒரேயொரு தெய்வம் முடிவுரை விரிந்து நிற்பது; இது காதல்.

காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை யெழுதலாகாதென்று தடுத்தால் அவர்கள், நமக்குத் தெரியாதபடி, ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டுபிடித்துப் பேசிக் கொள்கிறார்கள். பறவைகளின் பாட்டையும், மலர்களின் கந்தத்தையும், குழந்தையின் சிரிப்பையும், ஞாயிற்றின் ஒளியையும், காற்றின் உயிர்ப்பையும், விண்மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது? தெய்வத்தின் படைப்பு முழுதும்காதலுக்குத் தொண்டு செய்யும் பொருட்டே அமைந்திருக்கிறது. உலக முழுதையும் தூதுபோகச் செய்கிற திறமை காதலர்க்குண்டு.

இளவேனிற் காலமே, நான் அவளுக்கு எழுதுகிற ஓலை நீ.உயிரே, நீ கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியானால், தொட்டால் வாடிச்செடியாகி விடு; மனிதனானால், காதல் செய். காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.

Friday, October 19, 2012

கொட்டைய சாமி

தென் பாண்டி நாட்டில் நெட்டையபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. எந்தக் காரணத்தாலோ, அவ்வூர் ஜனங்கள் அக்கம் பக்கத்துக் கிராமத்தார்களைக் காட்டிலும் சராசரி முக்கால் அல்லது ஒரு சாண் அதிக உயரமாக இருப்பார்கள். இது பற்றியே நெட்டையபுரம் என்ற காரணப்பெயர் உண்டாயிற்றென்று பல பண்டிதர்சுகள் ஊகிக்கிறார்கள்.

அந்த ஊரில் மிகவும் கீர்த்தி யுடைய சிவன் கோயில் ஒன்றிருக்கிறது. ஆனித் திருவிழாவின் போது அக்கோயிலில் தேரோட்டம் மிகவும் அற்புதமாக நடக்கும் சூழ்ந்துள்ள கிராமங்களினின்றும் நாயக்கர்களும், நாய்க்கச்சிகளும், ரெட்டிகளும் ரெட்டிச்சிகளும், பறையர் பறைச்சிகளும் பெருங் கூட்டமாகத் தேர் சேவிக்கும் பொருட்டு வந்து கூடுவார்கள்.

கொண்டையெல்லாம் செவ்வந்திப் பூ, வீதியெல்லாம் கரும்பு சவைத்துத் துப்பிய சக்கை. அவர்களுடைய குழந்தைகள் ஆணும் பெண்ணும், பெரும்பகுதி நிர்வாணமாகவும், சிறு பகுதி இடுப்பில் மாத்திரம் ஒருசிறு துணியை வளைந்து கட்டிக்கொண்டும் வரும். துணி உடுத்திய குழந்தைகளுக்குள்ளே ஆண் பெண் வேற்றுமை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஏனென்றால், ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் முன் குடுமி சிரைக்கும் விநோதமான வழக்கம் அந்த ஜாதியார்களுக்குள்ளே காணப்படுகிறது.

மேற்படி நெட்டையப் புரத்தில் ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவருக்கு இப்போது சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும். செக்கச்செவேலென்று எலுமிச்சம்பழம் போலவே பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அவருடைய நடையுடை பாவனைகளிற் உடை மாத்திரம் இங்கிலீஷ்மாதிரி. நடையும் பாவனைகளும் முற்காலத்துப் பாளையக்காரரைப் போலேயாம். பூட்ஸ் முதல் தொப்பிவரை அம்மனிதருடைய உடுப்பைப் பார்த்தால் லண்டன் நகரத்து லார்டு மக்களின் அச்சு சரியாக இருக்கும். இவர் மூன்று தரம் இங்கிலாந்துக்குப் போய் வந்திருக்கிறார். இங்கிலீஷ் பாஷை பேசினால், திக்காமலும் தட்டாமலும் சர சர சர வென்று மழை வீசுவது போல் வீசுவார். அவருக்குத் குதிரை யேற்றத்திலும் வேட்டையிலும் பிரியம் அதிகம். நானூறு வேட்டை நாய்கள் வளர்க்கிறார். இவருடைய அந்தப்புரத்தில் பன்னிரண்டு தாலி கட்டிய பெண்டாட்டிகளும் வேறு பல காதல் மகளிரும் இருக்கிறார்கள்.

இந்த ஜமீன்தார் சிவ பக்தியில் சிறந்தவர். விபூதி ருத்திராக்ஷங்களை மிகவும் ஏராளமாகத் தரிக்கிறார். தினம் இரண்டு வேளை அரண்மனையில் தானே சிவபூஜை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை தோறும் தவறாமல் மாலையில் சிவன் கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிவருகிறார். திருவிழாக் காலங்களில் முதலாவது வந்து நின்று முக்கால் வாசிப் பொழுதையும் கோயிலிலே செலவிடுவார். தேரோட்டத்தின்போது வடத்தை மற்ற ஜனங்களுடன் சேர்ந்து நெடுந்தூரம் இழுத்துக்கொண்டு போவார். அப்பால் கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு ஜனங்களை உற்சாகப்படுத்தின "படியாகவே, தேர் மீட்டும் நிலைக்கு வந்து நிற்க எவ்வளவு நேரமான போதிலும் கூடவே வருவார்.

கோயிலுக்கு வரும் ஸமயங்களில் மாத்திரம் இவர் ஐரோப்பிய உடையை மாற்றித் தமிழ் உடை தரித்துக் கொண்டு வருவார். பலாச் சுளைகளைப்போல் மஞ்சளாகக் கொழுக்குக் கொழுக் கென்ற உடம்பும் பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஒரு ஜரிகைப் பட்டுத் துண்டும், கை நிறைய வயிர மோதிரங்களும், தங்கப் பொடி டப்பியும், தங்கப்பூண் கட்டிய பிரம்புமாக இந்த ஜமீன்தார் சென்ற ஆனித் திருவிழாவின்போது, ஒரு நாட் காலையில், மேற்படி சிவன் கோயிலுக்கெதிரே, வெளிமண்டபத்தில் கல்யாண ஜமக்காளத்தின் மீது பட்டுத் தலையணைகளில் சாய்ந்து கொண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த வெள்ளிக்காளாம்பியில் சவைத்துத் துப்பிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், மேற்படி ஜமீன்தாரின் முன்னே, கன்னங்கரேலென்ற நிறமும், மலர்போலத் திறந்த அழகிய இளைய முகமும், நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக, ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய இளைஞனொருவன் வந்து தோன்றினான். "இவன் பெயர் கொட்டைய நாயக்கன். இவன் யோகியென்றும் அந்த ஊரில், சிலர் சொல்லுகிறார்கள். ஞானப் பயித்தியங் கொண்டவனென்று சிலர் சொல்லுகிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவனுக்குக் கொட்டைய சாமியார் என்று வழங்குகிறார்கள்.

இவனைக் கண்டவுடனே ஜமீன்தார்:- "வாடா, கொட்டையா" என்றார்.

'சாமி, புத்தி' என்றான் கொட்டையன்.

'காவி வேஷ்டி உடுத்திக் கொண்டிருக்கிறாயே; என்ன விஷயம்?' என்று ஜமீன்தார் கேட்டார்.

கொட்டையன் மறுமொழி சொல்லவில்லை. சும்மா நின்றான்.

'ஸந்யாஸம் வாங்கிக்கொண்டாயா?' என்று ஜமீன்தார் கேட்டார்.

'ஆமாம்; பாண்டியா, ஊரார் வீட்டு ஸ்திரீகளை யெல்லாம் ஸந்யாஸம் பண்ணிவிட்டேன்' என்று கொட்டையன் சொன்னான்.

'சாப்பாட்டுக் கென்ன செய்கிறாய்' என்று ஜமீன்தார் கேட்டார்.

"என்னுடைய பெண்டாட்டிக்கு அரண்மனையில் சமையலறையில் வேலையாயிருக்கிறது. அவள் அங்கிருந்து பேஷான நெய், தயிர், சாதம், கறி, எல்லாம் மஹாராஜா போஜனம் பண்ணு முன்னாகவே எனக்குக் கொணர்ந்து தருகிறாள். ஆதலால், பரமசிவனுடைய கிருபையாலும், மஹாராஜாவின் கிருபையாலும்,மேற்படி பெண்டாட்டியின் கிருபையாலும் சாப்பாட்டுக்கு யாதொரு "கஷ்டமுமில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"துணிமணிகளுக்கு என்ன செய்கிறாய்?" என்று ஜமீன்தார் கேட்டார்.

கொட்டையன் மறுமொழி யொன்றுஞ் சொல்லவில்லை. சும்மா நின்றான்.

அப்போது ஜமீன்தார் அவனை நோக்கி:- "நாலாநாள் இரவில் நீ கீழவாயிலோரத்திலுள்ள பாம்பலம்மன் கோயிலிலிருந்து சில கற்சிலைகளையும், ஒரு வேலாயுதத்தையும் வேஷ்டிகளையுந் திருடிக்கொண்டு வந்தாயாமே; அது மெய்தானா!" என்று கேட்டார்.

"இல்லை, பாண்டியா திருடிக்கொண்டு வரவில்லை. சும்மா எடுத்துக்கொண்டு வந்தேன்" என்று கொட்டையன் சொன்னான்.

இதைக் கேட்டவுடனே ஜமீன்தார் கலகல வென்று சிரித்தார். பக்கத்திலிருந்த மற்றப் பரிவாரத்தாரும் சிரித்தார்கள்.

அப்போது ஜமீன்தார் கேட்கிறார்:- "சரி, கொட்டையா, நீ திருடவில்லை; சும்மா எடுத்துக்கொண்டு வந்தாயாக்கும். சரி, அப்பாலே என்ன நடந்தது?" என்றார்.

"கோயிற் பூசாரி சில தடியாட்களுடன் என் வீட்டுக்கு வந்து ஸாமான்களைக் கேட்டான். சிலைகளையும் துணிகளையும் திரும்பக்கொடுத்து விட்டேன். வேலாயுதத்தை மாத்திரம் கொடுக்கவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"ஏன்?" என்று ஜமீன்தார் கேட்டார்.

"அந்த வேலை எங்கள் வீட்டுக் கொல்லையில் மந்திரஞ் சொல்லி ஊன்றி வைத்திருக்கிறேன். அத்தனை பயல்களுங் கூடி அதை அசைத்து அசைத்துப் பார்த்தார்கள். அது அணுவளவு கூட "அசையவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"அவ்வளவு பலமாக ஊன்றி விட்டாயா?" என்று ஜமீன்தார் கேட்டார். "இல்லை, பாண்டியா, அதை ஒரு பூதம் காப்பாற்றுகிறது. ஆதலால் அசைக்க முடியவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.இதைக் கேட்டவுடன் ஜமீன்தார் கலகலவென்று சிரித்தார். ஸபையாரும்நகைத்தனர்.

அப்போது, ஜமீன்தார் கொட்டையனை நோக்கி, "ஏதேனும் பாட்டுப் பாடு; கேட்போம்" என்றார்.

"உத்தரவு; பாண்டியா என்று சொல்லிக் கொட்டையன் கண்ணனைப் போலவே கூத்தாடிக் கொண்டு பின்வரும் டொம்பப் பாட்டுகள் பாடலானான்.

(வண்டிக்கார மெட்டு)

1. கால் துட்டுக்குக் கடலை வாங்கிக்
காலை நீட்டித் தின்கையிலே
என்னை யவன் கூப்பிட்டே
இழுத் தடித்தான் சந்தையிலே,
"தண்டை சிலம்பு சல சலென
வாடி தங்கம்,
தண்டை சிலம்பு சல சலென"

" 2. சந்தையிலே மருக் கொழுந்து
சரம் சரமாய் விற்கையிலே
எங்களிடம் காசில்லாமல்
எங்கோ முகம் வாடிப் போச்சே!
"தண்டை சிலம்பு சல சலென;
வாடி தங்கம்,
தண்டை சிலம்பு சல சலென."

கொட்டையன் இங்ஙனம் ஆட்டத்துடன் பாடி முடித்தவுடனே, ஜமீன்தார் "சபாஷ்" என்று சொல்லி, "இன்னுமொரு பாட்டுப் பாடு, கொட்டையா" என்றார்.

கொட்டையன் தொடங்கிவிட்டான்:-

(பாட்டு)

"காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்,
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்
"எப்போ எப்போ கலியாணம்?"
காடு விளைய விட்டுக்
கண்டாங்கி நெய்ய விட்டுக்
கொக்குச் சமைய விட்டுக்
குழைய லிட்டே தாலிகட்டிக்
"காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்."

இதைக் கேட்டு ஜமீன்தார் "சபாஷ்" என்று சொல்லிக் கொட்டையனை நோக்கி, "இன்னுமொரு பாட்டுப் பாடு" என்றார்.

கொட்டையன் உடனே ஆட்டமும் பாட்டுந் தொடங்கி விட்டான்:-

(பாட்டு)

"வெற்றிலை வேண்டுமா, கிழவிகளே?"
"வேண்டாம், வேண்டாம், போடா!"
"பாக்கு வேண்டுமா, கிழவிகளே?"
"வேண்டாம், வேண்டாம், போடா!"
"புகையிலை வேண்டுமா, கிழவிகளே?"
"வேண்டாம், வேண்டாம், போடா!"
"ஆமக்கன் வேண்டுமா, கிழவிகளே?"
"எங்கே? எங்கே? கொண்டுவா, கொண்டுவா"

இந்தப் பாட்டைக் கேட்டு ஜமீன்தார் மிகவும் சிரித்து "போதும்; போதும்; கொட்டையா, நிறுத்து; நிறுத்து" என்றார்.

கொட்டையன் ஆட்டத்தையும் பாட்டையும் உடனே நிறுத்தி விட்டான். இப் பாட்டுகளை மிகவும் அற்புதமான நாட்டியத்துடன் கொட்டையன் பாடியது பற்றி ஜமீன்தார்மிகவும் ஸ்ந்தோஷ மெய்திக் கொட்டையனுக்கு ஒரு பட்டுத் துண்டு இனாம் கொடுத்தார்.

நான் அந்த ஸமயத்தில் அந்த கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்காகப் போயிருந்தேன். அங்கே இந்தச் செய்திகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்று ஸாயங்காலம் நான் மறுபடி அந்தக் கோயிலுக்குப் போனேன். அங்கு வெளி மண்டபத்துக் கெதிரே கொட்டையன் நின்றான். காலையில் தனக்கு ஜமீன்தார் இனாம் கொடுத்த பட்டுத் துண்டைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து இரண்டு கைகளிலும்"நாலி நாலியாகக் கட்டிக் கொண்டிருந்தான்.

நான் அவனை நோக்கி:- "ஏன், கொட்டைய சாமியாரே, பட்டை ஏன் கிழித்தாய்?"என்று கேட்டேன்.

இதைக் கேட்டுக் கொட்டையன்:

"பாட்டைக் கிழித்தவன் பட்டாணி -அதைப்
பார்த்திருந்தவள் கொங்கணச்சி -
துட்டுக் கொடுத்தவன் ஆசாரி - இந்தச்
சூழ்ச்சியை விண்டு சொல், ஞானப்பெண்ணே"

என்று பாடினான்.

"இதற்கென்ன அர்த்தம்?" என்று கேட்டேன். கொட்டையன் சிரித்துக் கொண்டு மறுமொழி சொல்லாமல் ஓடிப் போய்விட்டான்.

காலையில் ஜமீன்தாரிடம் பட்டுக்கு மேலே இவன் கொஞ்சம் பணமும் கேட்டதாகவும், அவர் கொடுக்க முடியாதென்று சொன்னதாகவும், அந்தக் கோபத்தால் இவன் பட்டைக் கிழித்துக் கைகளில் நாலி நாலியாகத் தொங்கவிட்டுக் கொண்டதாகவும், பின்னாலே பிறரிடமிருந்து கேள்விப்பட்டேன்.

"கொட்டைய சாமி" என்ற சிறிய கதை முற்றிற்று.

Thursday, October 18, 2012

திருவிளக்கு

நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம் 31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குப் பூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதி பாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம் புரிந்தனர்:-

ஊக்கம்

சகோதரிகளே,

பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர் ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம் மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்கு மாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம் பாடுபடுகிறோம்.

உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறு போலே ஓடி அலறிக் கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள் நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?

ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள். திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக் கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடைய லக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால் திரும்புங்கள்.

நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால் நீங்கள் பயப்படக் கூடாது.

'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர் சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளை இன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள். மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள் பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடைய ப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.

ஸ்ரீரங்கப் பாப்பா

பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார் குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-

அநாகரீக ஜாதியார்

இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னே இருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும் இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடைய சந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸா தேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்கு இனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து, துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளை உடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ள மனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவே நடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்கு லக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை.  நம்மைக் காட்டிலும் ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மை இஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்க வொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள் நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.

Wednesday, October 17, 2012

பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்

''காசி'' எழுதுவது:-

புதுச்சேரியில் சில தினங்களின் முன்பு நடந்த பெண்கள் மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்டமொன்றில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு:-

ஆரம்பம்

பார்வதி, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியபடங்களுக்குப் பூஜை முடித்த பிறகு விடுதலைப் பாட்டுகள் பாடப்பட்டன. பிறகு ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி மண்டயம் ஸ்ரீமதி கிரியம்மா பின்வரும் உபந்யாஸம்செய்தார்:

முயற்சியின் பயன்

நமது தேசத்தில் தெய்வ பக்தி அதிகமென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும். தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும். எப்படியென்றால் ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன்மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனஞ் செலுத்துகிறோம். அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு அதை எந்த விதத்திலாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிறோம். அதுபோல நாம் ஒரு கார்யத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தினப் பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்.

இப்போது நாம் முயற்சி செய்யவேண்டிய விஷயம் பெண் விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக, நாம் அடிமைப் பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.

'உங்களுடைய வழி இதுதான்' என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது.

இப்போது நாம் 'இப்படி இருக்கமாட்டோம்'என்றால், 'சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னெருவழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

'நான் தூங்குவேன்' என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம்:- 'ஸூசகமாகத் தூங்கு, உனக்குமெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்' என்று சொல்லி நம்மைத் தட்டித் தூங்கப் பண்ணுகிறது.

'மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்' என்றால், 'எழுந்திரு குழந்தாய், இதோ பார்; "உனக்கு இந்தப் பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை' என்கிறது.

ஆதலால், ஸகோதரிகளே, தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே தேட வேண்டும். 'முயற்சிதிருவினை ஆக்கும்' என்பது முன்னோர் உறுதிமொழி. நாம் எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம். தெய்வம் நன்மை செய்யும். நம்முள் ஏதேனும் வருத்தம் நேர்ந்தால், அதை நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்த இடத்தில் தாக்ஷண்யமில்லாமற் சொல்லித் தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவுகொடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால் தெய்வத்தை இரங்குவித்தல். ஆதலால் முயற்சிசெய்வோம். ஓம் வந்தே மாதரம்.

அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரியாகிய ஸ்ரீ தங்கம்மா பின்வரும் பத்திரிகையைப்படித்தனர்:-

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னே சீன தேசத்தில் செகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்ற பட்டணத்தில் ஒரு ராஜாங்க உத்தியோகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது கதாநாயகி பிறந்தாள். இவளைக்குறித்துச் சென்ற வருஷம் ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்ரெவ்யூ' (ஆசிய பரிசோதனை) என்ற பத்திரிகையில் லயோநெல்கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ளகதையில் ஸாராம்சமான சில பகுதிகளை இந்த சபையின் முன்னே தெரிவிக்கிறேன்.

ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியை நாட்ட வேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில் நாட்டம் செலுத்தி வரும் உங்கள் அனைவர்க்கும் மிகவும் ரஸமாகத் தோன்றக் கூடும்.

''சியூ சீன்'' என்ற பெயரில் சீன் என்பதற்கு''ஒளியுடைய ரத்னம்'' என்பது பொருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மழை பெய்யுங்காலம்) என்ற பொருள் உடையது. பின்னிட்டு இவள் சிங்ஹஸியாங் என்ற பட்டப்பெயர் தரித்துக்கொண்டாள்; அதன் பொருள் ''ஆண்மக்களுடன் போர் செய்பவள்'' என்பது இவளுக்கு ''சியெந்-ஹெூ நு-சி-யெஹ்'' என்றும் ஒரு பெயருண்டு. அதன் பொருள் யாதெனில் ''கண்ணாடி ஏரிக்கரைப் பெண்வக்கீல்'' என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரதேசத்தில் ஒரு ஏரிக்குப் பெயர்.

பதினெட்டாம் வயதில் இவள் ''லாங்'' என்ற"பெயருள்ள ஒருவனை மணம் செய்து கொண்டு அவனுடன் சீனத்து ராஜதானியாகிய பெசிங் நகரத்தில் சென்று வாழ்ந்தாள். அங்கே இவளுக்கு ஒரு பெண் குழந்தையும் ஓராண்குழந்தையும் பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர்கலக நிமித்தமாக பெகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்படைகள் புகுந்து சீனத்துக்குச் செய்த பழிகளைக் கண்டு மனம் பொறுக்காமல், இவள் 'ஐயோ, மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தும் நம்முடைய மனுஷ்ய சக்தியைக் காண்பிக்கும் பொருட்டாகக் கஷ்டங்களையும் விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் நமக்கில்லாமல் போய்விட்டதே! வீட்டுக் காரியங்களின் அற்பக் கவலைகளுக் கிரையாகி மடியவா நாம் பூமியில் பெண் பிறந்தோம்' என்று சொல்லிபெருமூச்செறிந்து வருத்தப்பட்டாள்.

சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம் வஹித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும் சேர்ந்திருந்தது. சீன ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன் கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப் பொருந்தவில்லை. யாதலால், இவள் பாக்ஸர், கலகத்திற்குப்பின் இரண்டு மூன்று வருஷங்களுக்குள் தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகவே பிரிந்துவந்துவிட்டாள்.

இதனிடையே இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிடைத்த பணம் முழுதையும் ஒரு அயோக்கிய வியாபாரியிடம் கொடுத்து அவன் மூலமாக வியாபாரச் சூதில் இழந்துபோய்விட்டாள்.

பின்பு ஐப்பானில் போய் ஐரோப்பிய நவீனக்கல்வி பயின்றால் இக்காலத்தில் அதிகப் பயன் பெருகி வாழலாம்'' என்ற எண்ணமுடையவளாய்த் தன்னுடைய ஆபரணங்களை விற்றுப் பணம் சேகரித்துக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட ஆயத்தங்கள் செய்தாள். ஆனால்,இவள் பெகிங் நகரத்திற்குப் புறப்படு முன்னே அங்குசீர்திருத்த கக்ஷியைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் பிடித்து அடைத்து வைத்திருப்பதாகவும், வக்கீல் நியமிக்கவும், வழக்கு நடத்தவும் பணமில்லாதபடியால் ஏனென்று கேட்பாரில்லாமல் அவன் சிறைக் களத்திற்கிடந்து வருவதாகவும் பணத்திற் பெரும் பகுதியை அவனுக்குக் கொடுத்தனுப்பி விட்டாள்.

மிஞ்சிய சிறு தொகையுடன் 1904-ஆம் வருஷம் ஏப்ரல் மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக் கப்பலேறினாள். ஜப்பான் ராஜதானியாகிய டோக்யோ நகரத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தால் விரைவில் கீர்த்தியடைந்து விட்டாள். சீனத்து மாணாக்கரின் ஸபைகள் பலவற்றில் சேர்ந்து விளங்கினாள். மேலும் அப்போது சீனத்தில் அரசு செலுத்திய மஞ்சு ராஜ்யவம்சத்தை ஒழித்துவிட வேண்டு மென்ற கருத்துடன் இவள் தானாகவே பல ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள் ஏற்படுத்தித் திறமையுடன் உழைத்து வந்தாள். சீனாவில் இப்போது நடைபெறும் குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் இவளும் ஒருத்தி.

1905-ம் வருஷத்து வஸந்த காலத்தில் இவள்தன் கல்வியின் பொருட்டுப் பின்னும் பணம் சேர்க்குமாறுசீனத்துக்கு வந்தாள். அப்போது சீனத்திலிருந்த பெரியராஜ்யப் புரட்சித் தலைவர்களுடன் இவள் ஸ்நேகம்ஏற்படுத்திக்கொண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின் மூலஸபையாகிய ''குலாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸபையில் சேர்ந்தாள். பிறகு அவ்வருஷம் செப்டம்பர் மாஸத்தில் டோக்யோவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த ஸுனயத்-ஸேன் என்ற மஹாகீர்த்தி பெற்ற குடியரசுக் கக்ஷித் தலைவனுடன் பழக்கம் பெற்றாள்.

அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில் ஸ்ரீமதி ய்ஜுஹுஹ என்ற தனது தோழியும் தன்னைப் போல் கவி ராணியுமான ஸ்திரீயுடன் சேர்ந்து ஒரு பெண் பள்ளிக்கூடத்து உபாத்திச்சியாக வேலை செய்தாள்.

அப்பால் நாடு முழுதிலும் கலாசாலைகள் ஸ்தாபனம் செய்தும், ரஹஸ்ய ராஜ்யப்புரட்சி ஸபையின் கிளைகள் ஏற்படுத்தியும், பத்திரிகைகள் நடத்தியும் தொழில் புரிந்தாள். இங்கிலீஷ் பாஷையிலும் இவள் தகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததாக லயோநெல்கிப்ஸ் சொல்லுகிறார்.

அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகிய ஷாவ்ஸிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒரு பாடசாலை நடத்தினாள். ஆனால் அது வெளிக்குப் பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப்பயிற்சிக் கூடமாகவும் நடை பெற்றது. மாணாக்கரெல்லாம் படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.

இவளுடைய முடிவைக் குறித்து லயோநெல்கிப்ஸ் பின் வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகலில்இவளுடைய ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் படைகள் ஷாவ்ஸிங் நகரத்தின் மீது தண்டெடுத்து வருவதாகக் கூறினார்கள். அவள் மறுபடி ஒற்றுப் பார்த்து வரும்படி சிலரை ஏவினாள். நகரத்தருகிலுள்ள நதியைத் தாண்டிக்கீழ்க் கரைக்கு மஞ்சுப்படை வந்து விட்டதென இவ்வொற்றர் வந்து சொன்னார்கள். பிறகு மிக விரைவில் மஞ்சுப்படை நகரத்துள்ளே புகுந்து விட்டது. மாணாக்கர்கள் அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாலோசனை நடத்தி இவளைத் தப்பியோடும்படி சொல்லினர். இவள் மறுமொழி கூறவில்லை. மஞ்சுப்படை கலாசாலையின் முன்னே வந்துநின்றது. எனினும் உடனே உள்ளே நுழைய அதற்கு தைர்யம் ஏற்படவில்லை. மாணாக்கர்களில் பெரும்பாலோர் புழக்கடை வழியாக வெளியே குதித்தோடிவிட்டனர். ஏழெட்டுப் பேர்மாத்திரம் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு வாயிலில் நின்ற தளத்தின் மீது பாய்ந்தனர். எதிர்பார்க்காத இச் செய்கைகளைக் கண்ட மஞ்சுப் படை திகைத்துவிட்டது. அப்போது நடந்த போரில் மஞ்சுப்படையாளர் பலர் கொலையுண்டும் புண்பட்டும் வீழ்ந்தனர். மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்ளே ஓரறையில் வீற்றிருந்த சியூசீனையும் அவளுடன் அறுவரையும் படைவந்து கைதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின் முன்னே சியூ சீனைக் கொண்டு நிறுத்தி வாக்கு மூலம் கேட்டபோது உடந்தையானவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றகருத்தால் இவள் ஒரு சொல்லேனும் மொழியவில்லை.

'சியூ யூசி யூதெங் சவிஷா ஜென்' என்ற கவிதைவாக்கியத்தை மாத்திரம் எழுதிக்காட்டினாள்.

இதன் பொருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மழையும், மார் புண்ணாக வருத்துகின்றனவே' என்பது.

அப்பால் இவளுக்குக் கொலை தண்டனை விதிக்கப்பட்டது. ஜூலை 15-ம் தேதி யன்று ஸுர்யோதயவேளையில் இவள் ஷங் ஸிங் நகர மண்டபத்தருகே தூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ் செந்நிறமுடைய மேகமொன்று இவள் தலையின்மீதே வானத்தில் பறந்ததென்றும், குளிர்ந்த வாடை வீசிற்றென்றும் தூக்கிட்டோரும் பார்த்து நின்றோரும் துக்கத்தால் மெய் நடுங்கினரென்றும், ஆனால் சியூசீன் ப்ரிபூரண சாந்தியுடன் தூக்கு மரத்துக்குச் சென்றாளென்றும் லயோநெல் கிப்ஸ் சொல்லுகிறார்.

சியூ சீன் ஒரு பொதுக்கூட்டத்தில் செய்த உபந்யாஸமொன்றின் ஸாராம்சத்தை லயோநெல் கிப்ஸ் எழுதியிருக்கிறபடிஇங்கு மொழிபெயர்த்துச் சொல்லுகிறேன். அதினின்றும்இவளுடைய உண்மையான குணத்தை அறிந்து கொள்ளுதல்சற்றே எளிதாகுமென்று நினைக்கிறேன். சியூ சீன்சொல்லுகிறாள்:-

ஸஹோதரிகளே, பல்லாயிர வருஷங்களாக நாம்ஆண் மக்களின் கொடுமைக்குக் கீழ்ப்பட்டு வாழ்கிறோம்.எந்தக் காலத்திலும் நமக்கு ஓரணு வளவாயினும் ஸ்வதந்திரம்இருந்தது கிடையாது. மூன்று விதமான கீழ்ப்படிதலென்றும்,"நான்குவிதமான பெண்ணறங்களென்றும் சொல்லிப் பழையசாஸ்திர விதிகள் நம்மை இறுகக் கட்டியது மன்றி இந்தபந்தத்தை எதிர்த்து நாம் ஒரு வார்த்தைகூட உச்சரிக்கக்கூடாத வண்ணமாக நம்மை அடக்கிவிட்டன. ஸ்திரீகளாகியநம்மைச் சிறு குழந்தைப் பிராய முதலாகவே பாதங்களைக் கட்டுதல் என்ற வழக்கத்தால் எண்ணுதற்கரிய துன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த முறையால் நமதுபாதம் வற்றிச் சதையும், எலும்பும் குறுகிச் சிதைந்துபோகின்றன. இதனால் நம்முடல் பலமிழந்து உழைப்பதற்குத் தகுதியற்ற தாய் விடுகிறது. எல்லாக் காரியங்களிலும் நாம் ஆண் மக்களைச் சார்ந்து நிற்க நேரிட்டது. விவாகம் நடந்த பின்னர் நம்மைக் கணவர் அடிமைகளைப் போல நடத்துகிறார்கள். அவர்களுக்குத் துணிப்பெட்டி தைத்துக்கொடுக்கவும், சமையல் பண்ணவும், சோறு போடவும்,தேயிலைக் காய்ச்சிக் கொடுக்கவும், வாயில் தெளிக்கவும், குப்பை பெருக்கவும், அவர்களுக்கு ஸ்நானம் செய்துவைக்கவும், பணி செய்யவும் மாத்திரமே நம்முடைய சக்திகளெல்லாம் செலவாகின்றன. முக்கியமான கார்யம் எதிலும் நாம் சிறிதளவேனும் கலக்கக் கூடாது. வீட்டுக்கு யாரேனும் விருந்தாளி வந்தால் உடனே நாம் அந்தர்த்தானம் பண்ணி அறைக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொள்ளவேண்டும். எதைக் குறித்தும் நாம் ஆழ்ந்த விசாரணை செய்யக் கூடாது. ஏதேனும் வாதத்தில் நீண்ட மறுமொழிசொல்லப் போனால் ஸ்திரீகள் அற்பமதியுடையவர்களென்றும் ஸ்திரபுத்தியில்லாதவர்களென்றும் சொல்லி நம்முடைய வாயை அடைத்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நம்முடைய தைர்யக் குறைவேயன்றி வேறில்லை. இந்த தைர்யக் குறைவுக்குரிய பல ஹேதுக்களில் நம்மைக் குழந்தைப் பிராயத்திலேயே பாதங்கட்டி விடுதல் ஒன்றாகும். ''மூன்றங்குலப் பொற்றாமரைகள்'' என்றும், அவற்றின் 'மோஹனச் சிறுநடை' என்றும் வர்ணித்துப் பெண் குழந்தைகளின்அடிகளைக் கட்டிப் போடும் தீமையால் நாம் சக்தியிழந்துவிட்டோம். இன்று எனது ரத்தம் கொதிப்புற்று நிற்கிறது. உங்களுடைய ரத்தத்தையும் கொதிக்கும்படி செய்யவிரும்புகிறேன். முதலாவது, இனிமேல் எல்லா ஸ்திரீகளும் சூர்ணம் தடவுவதையும் முகப்பூச்சுகள் பூசுவதையும் நிறுத்திவிட வேண்டும். மோஹப்படுத்த வேண்டுமென்று பொய்ப் பூச்சுகள் பூசக் கூடாது. ஒவ்வொரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள் கொடுத்த முகமிருக்கிறது. பாதங்களைக் கட்டும் நீச வழக்கத்தை உடனே வேரோடு களைந்து எறிந்து விடவேண்டும். ஐந்து கண்டங்களிலுமுள்ள வேறெந்த நாட்டிலும் இவ்வழக்கம் கிடையாது. அப்படியிருந்தும் உலகத்தில் சீனாவே அதிக நாகரீகமுடைய தேசமென்று நமக்குள்ளே பிதற்றிக் கொள்ளுகிறோம். பாதக்கட்டு மட்டுமேயன்றி, இன்னும் பழைய கெட்ட வழக்கங்கள் எத்தனை உள்ளனவோ அத்தனையும் ஒழித்தெறிவோம். ஆண்மக்களுக்கு இனி அடிமைகளாக வாழ மாட்டோம். தைர்யத்துடன் எழுந்து நின்று தொழில் செய்து நம்முடைய ஸ்வதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவோம்.

அப்பால் மேற்படி கூட்டத்தில் சகுந்தலா பின்வரும்பாட்டுப் பாடினாள்.

சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.

விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ?

திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்.
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண் களெனி லவரோடும்
சிறுமை தீர நந்தாய்த் திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே

விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரீகம் புதிதொன்றே!"
கொடியர் நம்மை யடிமைக ளென்றே,
கொண்டு தாமுதலென்றன ரன்றே!
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே. (3)

அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன் 'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.